அணைக்கட்டில் அம்மா மருந்தகம் அமைக்க வேண்டும் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கோரிக்கை

அணைக்கட்டில் அம்மா மருந்தகம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர்.

Update: 2018-07-07 00:12 GMT
அணைக்கட்டு,

அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. தாசில்தார் குமார் தலைமை தாங்கினார். தலைமை நிலஅளவர் சதீஷ், வருவாய் ஆய்வாளர்கள் தேவிகலா, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையிடத்து துணை தாசில்தார் காமாட்சி வரவேற்றார்.

100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு குறைகளை நிறைவேற்றக்கோரி பேசினர். அவர்கள் கூறியதாவது:-

அணைக்கட்டு தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இது வரையில் இந்த பகுதியில் அம்மா மருந்தகம் அமைக்கப்படவில்லை. அம்மா மருந்தகம் அமைத்தால் ஏழை, எளியோர் குறைந்த விலையில் மருந்துகள் பெற்று பயன்பெறுவார்கள்.

சிறு,குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சான்றிதழ்களை இனி ஆன்லைனில் தான் பெறவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

பொய்கைபுதூரில் 6 மாதத்திற்கு முன்பு சாலை அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. அந்த பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டதால் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. எனவே, உடனடியாக அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

காலை 7 மணி முதல் 8.30 மணி வரை இலவம்பாடி வழியாக வேலூர் செல்ல அரசு டவுன்பஸ்கள் எதுவும் வருவதில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த இடைப்பட்ட நேரத்தில் அரசு டவுன் பஸ்சை இயக்க வேண்டும். என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினார்கள்.

விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்