திருப்பூர் மண்டலத்தில் இருந்து 11 வழித்தடங்களில் புதிய பஸ் போக்குவரத்து அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்

திருப்பூர் மண்டலத்தில் இருந்து 11 வழித்தடங்களுக்கு புதிய பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

Update: 2018-07-07 00:14 GMT

திருப்பூர்,

தமிழக அரசு போக்குவரத்து துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய பஸ்கள் இயக்கத்திற்கு விடப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 542 புதிய பஸ்கள் சென்னையில் நடைபெற்ற விழாவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார். இதில் திருப்பூர் மாவட்டத்திற்கு மட்டும் மொத்தம் 44 பஸ்கள் ஒதுக்கப்பட்டன. இதன்படி திருப்பூர் மண்டலத்திற்குட்பட்ட திருப்பூர் 1-வது கிளைக்கு 4 பஸ்கள், 2-வது கிளைக்கு 6 பஸ்கள், பல்லடம் கிளைக்கு 4 பஸ்கள், காங்கேயம் கிளைக்கு 3 பஸ்கள், தாராபுரம் கிளைக்கு 4 பஸ்கள், உடுமலை கிளைக்கு 2 பஸ்கள், பழனி 1-வது கிளைக்கு 6 பஸ்கள், 2-வது கிளைக்கு 4 பஸ்கள் என மொத்தம் 33 பஸ்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த பஸ்கள் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மீதமுள்ள 11 பஸ்களை புறநகர் பகுதிகளுக்கு இயக்குவதற்கான தொடக்க விழா திருப்பூர் பழைய பஸ்நிலையத்தில் நேற்று காலை நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கொடி அசைத்து புதிய பஸ்களை தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் நலனுக்காக தமிழக அரசு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு என்ன தேவை என்பதை பார்த்து அதன்படி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து துறை சார்பாக இதுவரை இல்லாத அளவிற்கு குளிர்சாதன, படுக்கை வசதிகளுடன் கூடிய பஸ்களும் தற்போது இயக்கத்திற்கு விடப்பட்டுள்ளன.

பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பஸ்களை பயன்பாட்டிற்கு கொடுத்துள்ள அரசுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். போக்குவரத்துதுறையை பொறுத்தவரை மக்களின் நலனே முக்கியம். இதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப பஸ்களில் இருக்கைகள் குறைவான எண்ணிக்கையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து திருப்பூர் பழைய பஸ் நிலையத்தின் முன்புறம் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை நேரில் ஆய்வு செய்தார். மேலும், மேம்பால பணிகளை விரைந்து முடித்து அடுத்த மாதத்திற்குள் (ஆகஸ்டு) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேம்பாலத்தை திறந்து விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் சு.குணசேகரன், கே.என்.விஜயகுமார், கரைப்புதூர் நடராஜன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல பொது மேலாளர் கோவிந்தராஜ், துணை மேலாளர்கள் குணசேகரன்(வணிகம்), வேலுசாமி(தொழில்நுட்பம்), தெற்கு தாசில்தார் ரவிசந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்