பட்டப்பகலில் மூதாட்டியிடம் நூதன முறையில் 8½ பவுன் நகை அபேஸ் மர்மநபர்கள் கைவரிசை

தனியாக நடந்து சென்ற மூதாட்டியிடம் போலீஸ் எனக்கூறி நாடகமாடிய மர்மநபர்கள் 8½ பவுன் நகைகளை அபேஸ் செய்து கொண்டு தப்பி விட்டனர்.

Update: 2018-07-07 22:45 GMT
செய்யாறு,

வாலாஜா தாலுகா சாத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மல்லிகா (வயது 65). இவர் செய்யாறு தாலுகா பைங்கினர் கிராமத்தில் வசிக்கும் தனது தம்பி பத்மநாபன் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று காலை 10 மணிக்கு தனியார் பஸ்சில் செய்யாறுக்கு வந்தார். இங்கு அவுசிங்போர்டு பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர் பைங்கினர் கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

தனியாக அவர் சென்று கொண்டிருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் மல்லிகாவை பின்தொடர்ந்து சென்றனர். அவர்களில் ஒருவர் மூதாட்டி மல்லிகாவை மறித்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேனுக்கு அருகில் நின்றுகொண்டிக்கும் நபரை காட்டி, உங்களை அவர் கூப்பிட்டு வரசொன்னார் என அழைத்து சென்றுள்ளார்.

அப்போது அந்த நபர் தலையில் தொப்பி அணிந்து கொண்டு தன்னை போலீஸ் என கூறி “இப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடக்கிறது. அதற்காக தான் சாதாரண உடையில் நான் பணியில் உள்ளேன். நகை திருடுபவர்கள் நகைக்காக பெண்களின் கழுத்தையே அறுத்து விடுகின்றனர். அதனால் நகைகளை அணிந்து செல்லாமல் அவற்றை கழற்றி இதோ இந்த மணிப்பர்சில் வைத்துக்கொள்ளுங்கள்” என கையிலிருந்த பையில் இருந்து மணிப்பர்சை எடுத்து கொடுத்தார். பின்னர் நானே நகைகளை கழற்றி தருகிறேன் என்றார். மூதாட்டிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அப்போது அந்த வழியாக சென்ற ஒருவரிடம் இதே போல கூறியபோது அந்த நபர் நகைகளை கழற்றி பர்சில் வைத்து பேண்ட் பாக்கெட்டில் வைத்து கொண்டு சென்றுள்ளார்.

இதனை பார்த்த மூதாட்டியும் உண்மை தான் என எண்ணி தனது நகைகளை கழற்றி மணிப்பர்சில் வைத்து கைப்பையில் வைத்துள்ளார். தொடர்ந்து மர்ம நபர், மூதாட்டி கையில் வைத்திருந்த செல்போனையும் பையில் வைத்துக்கொள் எனக் கூறி செல்போனை வாங்கி பையில் வைக்கும்போது நைசாக மணிப்பர்சை எடுத்துக்கொண்டு கைப்பையினை எளிதில் திறக்காதவாறு பல முடிச்சுகள் போட்டு கொடுத்து அனுப்பினார்.

இந்த நிலையில் தம்பியின் வீட்டிற்கு சென்ற மூதாட்டி கைப்பையிலிருந்த முடிச்சுகளை அவிழ்த்து பார்த்த போது மணிப்பர்சு இல்லாதது தெரியவந்தது. மணிப்பர்சில் வைக்க சொல்லி நூதன முறையில் மூதாட்டி மல்லிகாவிடம் இருந்து 3½ பவுன் வளையல் மற்றும் 5 பவுன் சங்கிலி ஆகியவற்றை அந்த நபர் அபேஸ் செய்து சென்றுள்ளார். மூதாட்டியை நம்ப வைக்க கூட்டாக திட்டமிட்டு நாடகமாடி ஒருவர் நகைகளை கழற்றி பத்திரப்படுத்தி சென்றதும் தெரிகிறது.

இது குறித்து மல்லிகா கொடுத்த புகாரின்பேரில் செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப் பதிவு செய்து மல்லிகாவை, மர்மநபர்கள் நாடகமாடி நகை பறித்துச்சென்ற இடத்திற்கு அழைத்துச்சென்று அவர்களது அடையாளங்கள் குறித்து கேட்டு விசாரணை மேற்கொண்டனர். அதன்அடிப்படையில் மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

சமீப காலமாகவே செய்யாறு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக மூதாட்டிகளை குறி வைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டி நகைகளை பறித்துச்செல்வதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்