கார் ஓட்டுவதில் சாதனை

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை சமீபத்தில் நீக்கப்பட்டது.

Update: 2018-07-08 10:04 GMT
பெண்கள் கார் ஓட்டி பழகுவதற்கு ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறார்கள். 18 வயதை கடந்த ஏராளமானோர் பயிற்சி பெற்று ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்து வருகிறார்கள். நிறைய பெண்கள் ஓட்டுனர் உரிமம் பெற்று கார் ஓட்டுகிறார்கள்.

அங்கு ஓட்டுனர் உரிமம் பெற்று கார் ஓட்டும் முதல் இந்திய பெண் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார், சாரம்மா தாமஸ். இவர் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள கும்பநாடு பகுதியை சேர்ந்தவர். நர்சிங் படித்திருக்கும் சாரம்மா திருமணத்திற்கு பிறகு கணவர் மேத்யூவுடன் சவுதி அரேபியாவில் குடியேறியுள்ளார். அங்குள்ள மருத்துவ மனையில் நர்ஸ் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 4 வயதில் ஆய்தன் என்ற மகன் இருக்கிறான்.

சாரம்மா திருமணத்திற்கு முன்பே கேரளாவில் கார் ஓட்டி பழகிவிட்டார். வெளியிடங்களுக்கு கார் ஓட்டி செல்வதை பிடித்தமான பொழுதுபோக்காகவும் பின்பற்றியிருக்கிறார்.

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வந்ததும் உடனடியாக ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பித்து கார் ஓட்ட தொடங்கிவிட்டார்.

‘‘நான் 12 ஆண்டுகளாக நர்சிங் பணியில் இருக்கிறேன். அதில் மூன்று ஆண்டுகள் கேரளாவில் வேலை பார்த்திருக்கிறேன். அப்போதே கார் ஓட்ட கற்றுக் கொண்டு விட்டேன். இங்கு கார் ஓட்ட தடை நீங்கியதும் என் கணவர் விண்ணப்பம் வாங்கித் தந்தார். விண்ணப்பித்த மூன்றே நாட்களில் ஓட்டுனர் உரிமம் வாங்குவதற்கான பரிசோதனை செய்வதற்கு அழைப்பு வந்தது. நான் கார் ஓட்டி காண்பித்தேன். சரியாக ஓட்டியதால் அன்றே ஓட்டுனர் உரிமத்தை பெற்று விட்டேன்.

நான் கார் ஓட்டும் தகவல் தெரிந்ததும் நண்பர்கள், உறவினர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள். ஏராளமானவர்கள் வாட்ஸ் அப், பேஸ் புக்கில் வாழ்த்து செய்திகளை அனுப்பினார்கள். இந்தியாவில் இருப்பது போன்றே சவுதி அரேபியாவிலும் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. ஆனால் இங்கு கார் ஸ்டீயரிங் இடது புறம் இருக்கிறது. சாலைகளும் சிறப்பாக இருக்கின்றன. தானியங்கி கியர் மூலம் கார் ஓட்டுவதால் சாலையில் பயணிப்பது எளிதாக இருக்கிறது. நான் கார் ஓட்டி செல்வதை பார்க்கும் பெண்கள் என்னிடம் அதுபற்றி பேசுகிறார்கள். நான் அவர்களையும் ஊக்குவிக்கிறேன். என்னை பார்த்து இங்குள்ள பெண்கள் பலர் கார் ஓட்ட முன்வருவார்கள் என்று நம்புகிறேன்’’ என்கிறார். 

மேலும் செய்திகள்