பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2018-07-08 22:00 GMT
கோட்டூர், 

பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. தற்போது அணையில் 79.50 அடி தண்ணீர் உள்ளது. 1380.73 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இந்த அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதிக்கு உட்பட்ட ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள விவசாயிகள் தண்ணீர் பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் வழங்க நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் உயர்ந்து 79.50 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதிக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது. இந்நிலையில் பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதிக்கு உட்பட்ட 6400 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆனைமலை ஒன்றிய விவசாயிகளுக்கு காரப்பட்டி, பெரியனை, பள்ளிவெலங்கால், அரியாபுரம் மற்றும் வடக்கலூர் ஆகிய கால்வாய்கள் வழியாக ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு முதல்போக பாசனத்திற்க்கு 8-ந் தேதி முதல் வருகிற நவம்பர் மாதம் 5-ந் தேதி வரையிலான 120 நாட்களுக்கு இடைவிடாமல் மொத்தம் 1083 மில்லியன் கன அடி தண்ணீர் ஆழியாறு மின் உற்ப்பத்தி நிலையத்தில் இருந்து கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, விவசாய மக்களை காக்கவே இந்த ஆட்சி அமைந்துள்ளது. பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் தமிழகத்தில் இனி ஒரு போதும் தண்ணீர் பஞ்சம் என்பது ஏற்படாது என்று தெரிவித்தார். மேலும் இந்த பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் ஆகியோர் விவசாயிகளுடன் இணைந்து மலர் தூவி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை வரவேற்றனர்.

மேலும் செய்திகள்