திருச்செந்தூரில் பா.ஜனதாவினர் சென்ற பஸ் மீது கல்வீச்சு-பரபரப்பு

திருச்செந்தூரில் பா.ஜனதாவினர் சென்ற பஸ் மீது கல் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-08 22:30 GMT
திருச்செந்தூர், 

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா சென்னைக்கு இன்று (திங்கட்கிழமை) வருகிறார். அங்கு அவர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்செந்தூர் பஸ் நிலையத்தின் உள்புறம் உள்ள உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து பா.ஜனதா ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுமார் 40 பேர் ஒரு பஸ்சில் நேற்று இரவு புறப்பட்டனர்.

அந்த பஸ் பஸ்நிலையத்தின் உள்ளே இருந்து வெளியே வந்தது. பஸ்சில் வந்த பா.ஜனதாவினர் கோஷமிட்டபடி வந்தனர். அப்போது பஸ்நிலைய நுழைவுவாயில் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்க பேரவை சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென பா.ஜனதாவினர் வந்த பஸ் மீது கல் வீசப்பட்டது. இதில் பஸ்சின் கண்ணாடி நொறுங்கி சேதம் அடைந்தது. உடனடியாக அந்த பஸ் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் அந்த பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்