திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்ட கற்சிலைகள் சேதம்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்ட கற்சிலைகள் சேதமடைந்தது. இதனை கண்டித்து இந்து முன்னணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-08 23:01 GMT
திருவண்ணாமலை,


திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது அகற்றப்பட்ட இந்து தெய்வங்களின் கற்சிலைகள் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியை அடுத்துள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகில் வைக்கப்பட்டு இருந்தது.

இதில் கங்கையம்மன் சிரசு சிலை, ஆஞ்சநேயர் சிலை, அய்யப்பன் சிலை, சனீஸ்வரன் சிலை, முனீஸ்வரன் சிலை, நந்திகேஸ்வரன் சிலை, 2 நாகபாசன சிலைகள், கிருஷ்ணன் சிலை ஆகிய 10 கற்சிலைகள் உள்ளன. இவற்றில் சில சிலைகள் சேதமாகி உள்ளன.

இதனை அறிந்த இந்து முன்னணி மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று சேதமான கற்சிலைகளை பார்வையிட்டனர். இதையடுத்து அவர்கள் அந்த கற்சிலைகளின் அருகில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்து முன்னணியினர், “அகற்றப்பட்ட சிலைகளை கோவில்களில் வைக்காமல் காட்டு பகுதியில் வைத்து சேதப்படுத்தி உள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருவண்ணாமலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருப்பது இந்து மக்களின் மனதை புண்படுத்தி உள்ளது. எனவே, இந்த சிலைகளை இப்படி வைத்து சேதப்படுத்திய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் அவர்களிடம் கூறினர். இதையடுத்து இந்து முன்னணியினர் கலைந்து சென்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று மாவட்ட தலைவர் சங்கர் கூறினார்.

தர்ணா போராட்டத்தினால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்