பசுபதி பாண்டியன் ஆதரவாளர் உள்பட 2 பேர் கைது- 6 பஸ்கள் மீது கல்வீச்சு

ஜான்பாண்டியன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக பசுபதி பாண்டியன் ஆதரவாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக 6 பஸ்கள் மீது கல்வீசப்பட்டதால் நெல்லையில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-09 22:00 GMT
நெல்லை, 

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் வீடு பாளையங்கோட்டையில் உள்ளது. இந்த வீட்டில் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பெட்ரோல் வெடிகுண்டு வீசினர்.

அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர். அதற்குள் அந்த நபர்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கில் மானூர் அருகே உள்ள பள்ளமடையை சேர்ந்த பாலமுருகன் (வயது 27), மாவடியை சேர்ந்த பன்னீர்முருகன் (27), தச்சநல்லூரை சேர்ந்த கண்ணபிரான் ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று இரவு பிடித்து விசாரித்தனர். இதில் கண்ணபிரான், பாலமுருகன் ஆகிய இருவரையும் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

கைதான கண்ணபிரான், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் இளைஞர் அணி நிர்வாகியும், பசுபதிபாண்டியனின் தீவிர ஆதரவாளரும் ஆவார். கண்ணபிரான் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரது ஆதரவாளர்கள் பாளையங்கோட்டை போலீஸ் நிலையம் பகுதியில் திரண்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே ராஜபாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் அரசு பஸ் நேற்று இரவு 9 மணி அளவில் நெல்லையை நோக்கி வந்து கொண்டிருந்தது. நெல்லை தச்சநல்லூர் வடக்கு புறவழிச்சாலையில் வந்தபோது, மர்மநபர்கள் அந்த பஸ்சின் மீது கல் வீசினர். அதற்கு அடுத்ததாக மதுரையில் இருந்து நெல்லையை நோக்கி வந்த மற்றொரு அரசு பஸ் மீதும் மர்மநபர்கள் கல் வீசினர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் 2 பஸ்களின் முன்பக்க கண்ணாடியும் உடைந்தது.

இச்சம்பவம் தொடர்பாக தச்சநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். இதேபோல் ரெட்டியார்பட்டி உள்ளிட்ட மேலும் 4 இடங்களில் பஸ்கள் மீது கல்வீசப்பட்டது. இதனால் நெல்லையில் நேற்று இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்