கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளியால் பரபரப்பு

நாமக்கல்லில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-09 22:45 GMT
நாமக்கல்,

மோகனூர் அருகே உள்ள அரூரை சேர்ந்த ராமசாமி மகன் விஸ்வநாதன். மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணமாகி கஸ்தூரி என்ற மனைவியும், சபீனா, நாகேஷ்வரி என 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இதற்கிடையே நேற்று குடும்பத்துடன் நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்த விஸ்வநாதன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த வாட்டர் கேனில் இருந்த மண்எண்ணெயை மேலே ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

அப்போது விஸ்வநாதன், சிறிது அளவு மண்எண்ணெயை அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மீதும் ஊற்றி உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் விரைந்து சென்று விஸ்வநாதனிடம் இருந்த கேனை பறிமுதல் செய்ததோடு, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அதைத்தொடர்ந்து விஸ்வநாதன் மற்றும் குடும்பத்தினரை நல்லிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அருகாமை வீட்டில் குடியிருந்து வருபவர் தன்னையும், தனது குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் திட்டுவதோடு, அடித்து துன்புறுத்துவதாக விஸ்வநாதன் போலீசாரிடம் புகார் கூறி உள்ளார். மேலும் இதன் காரணமாகவே இன்று (நேற்று) தான் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதாகவும் அவர் கூறி உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயன்றதாக மாற்றுத்திறனாளி விஸ்வநாதனின் மனைவி கஸ்தூரி மீது நல்லிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்