தூத்துக்குடியில் காசநோய் கண்டறியும் விழிப்புணர்வு வாகனம்

தூத்துக்குடியில் காசநோய் கண்டறியும் நடமாடும் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2018-07-10 21:45 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காசநோய் கண்டறியும் மற்றும் விழிப்புணர்வு நடமாடும் வாகனம் தொடக்க விழா நடந்தது. கலெக்டர் சந்தீப்நந்தூரி கலந்து கொண்டு, வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது;-

திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் மூலமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சிறப்பான முறையில் காசநோய் கண்டுபிடிக்கப்பட்டு இலவச சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது ஆண்டுதோறும் 1 முதல் 2 சதவீதம் வரை காசநோயின் தாக்கம் குறைந்து வருகின்றது. காசநோயை துரிதமாக கண்டுபிடிக்க ‘சீபிநாட்’ என்னும் கருவி அதிகளவில் பயன்படுத்தப்பட உள்ளது.

2 மணி நேரத்தில் காசநோயை கண்டறியும் இந்த கருவி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி, கோவில்பட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் செயல்பாட்டில் உள்ளது. ‘சீபி நாட்’ கருவியின் பயன்பாடு மற்றும் காசநோய் பற்றிய விழிப்புணர்வினை தமிழக மக்கள் அறிந்திடும் வகையில் மத்திய காசநோய் பிரிவு சார்பில் நடமாடும் ‘சீபிநாட்’ ஆய்வு கூட வாகனம் நமது மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வாகனமானது தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களை கடந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்துள்ளது. இந்த வாகனமானது தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) வடக்கு திட்டக்குளம் மற்றும் இளம்புவனம் கிராமங்கள், 12-ந் தேதி திருச்செந்தூர், ஆறுமுகநேரி, ஏரல், தோழப்பன்பண்ணை, தலைவன்வடலி, கீரனூர், புனித லூக்கா தொழுநோய் மருத்துவமனை, ஆனந்தபுரம் கல்வாரி விடுதி, மெஞ்ஞானபுரம் சத்யா நகர் பகுதிகளுக்கும், 13-ந் தேதி முடுக்கலாங்குளம், கோவில்பட்டி நகர்புறம், கீழவைப்பார், குளத்தூர், நீராவிபுதுப்பட்டி ஆகிய பகுதிகளுக்கும், 14-ந் தேதி தூத்துக்குடி ராமதாஸ்நகர், ஆரோக்கியபுரம், கலைஞர் நகர், எம்.ஜி.ஆர்.நகர், எஸ்.எம்.புரம் மற்றும் தருவைகுளம் சமத்துவபுரம் பகுதிகளுக்கும் செல்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, இணை இயக்குனர் (நலப்பணிகள்) பரிதா ஜெரின், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) ராம்சுப்பிரமணியன், சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் கீதாராணி, போஸ்கோ ராஜா, சுந்தரலிங்கம், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி மற்றும் மருத்துவர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்