வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருச்செங்கோடு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2018-07-10 23:00 GMT
நாமக்கல்,

எலச்சிபாளையம் அருகே உள்ள கொன்னையாறு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 52). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த மே மாதம் 30-ந் தேதி குமாரமங்கலம் பிரிவு ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி பன்னீர்செல்வம் பையில் இருந்த ரூ.1,000 மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து அவர் திருச்செங்கோடு ரூரல் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.

இதற்கிடையே போலீசாரின் விசாரணையில் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள எட்டிகுட்டையானூரை சேர்ந்த முருகேசன் (வயது 32), சங்ககிரி அருகே உள்ள கன்னந்தேரி மேட்டுகாட்டானூரை சேர்ந்த துரை (29) ஆகியோர் பன்னீர்செல்வத்திடம் செல்போன் மற்றும் ரூ.1,000 பறித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

மேலும் இவர்கள் திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. எனவே இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அவரது பரிந்துரையை ஏற்று முருகேசன், துரை ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவிட்டு உள்ளார். இதற்கான உத்தரவு நகலை சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இருவரிடமும் திருச்செங்கோடு ரூரல் போலீசார் ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்