கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2018-07-11 21:30 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா 

இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்தவர் வீரன் அழகுமுத்துக்கோன். அவரது 308–வது பிறந்தநாள் விழா, அரசு விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த ஊரான கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர், 47 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 10 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 126 பெண்களுக்கு தமிழக அரசின் இலவச ஸ்கூட்டர், 20 பேருக்கு தொழிற்கடன், 6 பேருக்கு இஸ்திரி பெட்டி வழங்கினார். பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்கீழ் வீடு கட்டுவதற்கும், சூரிய மின்சக்தி திட்டத்தின்கீழ் பசுமை வீடு கட்டுவதற்கும் தலா 5 பேருக்கு ஆணை வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பேருக்கும், வேளாண்மை துறை சார்பில் 4 பேருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மொத்தம் 228 பயனாளிகளுக்கு ரூ.74 லட்சத்து 28 ஆயிரத்து 712 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கலெக்டர் 

விழாவில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, விஜிலா சத்யானந்த் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மகளிர் திட்ட இயக்குனர் ரேவதி, தாசில்தார்கள் லிங்கராஜ், பாக்கியலட்சுமி, யூனியன் ஆணையாளர்கள் முத்துகுமார், சீனிவாசன், மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன்,

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் சின்னத்துரை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், சின்னப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் தளபதி பிச்சையா, நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், பஞ்சாயத்து செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க.– தி.மு.க. 

பா.ஜ.க. சார்பில் மத்திய நிதி மற்றும் சாலை, கப்பல் போக்குவரத்து துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அகில இந்திய பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவ் எம்.பி., தேவநாதன் யாதவ், மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டவர்களும்,

தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., நகர செயலாளர்கள் கருணாநிதி, சுடலைமணி, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், சின்னபாண்டியன், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டவர்களும் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ம.தி.மு.க.– இந்து மக்கள் கட்சி 

ம.தி.மு.க. சார்பில் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் அழகுசுந்தரம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ், ஒன்றிய செயலாளர் கொம்பையா பாண்டியன், நகர செயலாளர் கட்டபொம்மன் முருகன் உள்ளிட்டவர்களும்,

இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் லட்சுமிகாந்தன் உள்ளிட்டவர்களும் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பால்குடம் ஊர்வலம் 

ஓம் சரவணாபுரத்தில் இருந்து கிராம மக்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கட்டாலங்குளத்துக்கு வந்து, வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். வீரன் அழகுமுத்துக்கோன் நலச்சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சங்க தலைவர் மாரிச்சாமி, செயலாளர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேசுவரன், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் ஆகியோர் மேற்பார்வையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமையில், 12 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், சுமார் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்