தூத்துக்குடியில் வக்கீல் தாக்கப்பட்ட சம்பவம்: வைகோ மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் கோர்ட்டு உத்தரவு

தூத்துக்குடியில் வக்கீல் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2018-07-11 21:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் வக்கீல் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

மோதல் 

தூத்துக்குடி கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு தொடர்பாக கடந்த 6–ந்தேதி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆஜராக வந்தார். அப்போது அங்கிருந்த சில வக்கீல்கள் வைகோவை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் வக்கீல்களுக்கும், ம.தி.மு.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

உத்தரவு 

இந்த நிலையில் வக்கீல் ஜெகதீஷ்ராம் என்பவர் தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், கடந்த 6–ந்தேதி தான் கோர்ட்டு வளாகத்தில் இருந்தபோது, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஒரு வழக்கில் ஆஜராவதற்காக கோர்ட்டுக்கு வந்ததாகவும், அப்போது வைகோ கூறியதால் ம.தி.மு.க.வினர் தன்னை தாக்கியதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடுமாறும் கூறி இருந்தார்.

மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு அண்ணாமலை, மனு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தென்பாகம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்