பெருவிளை வழியாக செல்லும் பஸ்–கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும்

நாகர்கோவில் பெருவிளை வழியாக செல்லும் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2018-07-11 23:00 GMT
நாகர்கோவில்,

காங்கிரஸ் கட்சி இதர பிற்பட்டோர் பிரிவு தென்மண்டல தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், இதர பிற்பட்டோர் பிரிவு நகர தலைவர் சிவகுமார் உள்பட பலர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் ஆசாரிபள்ளத்தில் இருந்து பெருவிளை, கிறிஸ்டோபர் நகர் வழியாக போக்குவரத்து மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பாதை குறுகிய வளைவுகள் மற்றும் குடியிருப்புகள் மிகுந்த பகுதியாகும். இந்த பாதையில் பஸ்கள், கார்கள், கனரக வாகனங்கள் சென்று வருவதால், கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவி வருகிறது. மேலும் இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மூலம் புழுதி பறப்பதால் எங்கள் பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இதனால் பலர் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். வாகனங்கள் நெருக்கடியாலும், கனரக வாகன போக்குவரத்து அதிகரித்திருப்பதாலும் சாலையோரம் உள்ள வீடுகளின் காம்பவுண்டு சுவர்கள் பாதிப்படைந்து வருகின்றன.

எனவே பெருவிளை வழியாக செல்லும் பஸ்–கனரக வாகனங்களை வேறு மாற்றுப்பாதை வழியாக இயக்க வேண்டும். இல்லையென்றால் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அப்போது காங்கிரஸ் நிர்வாகிகள் மகேஷ் லாசர், ஜெனித், அன்னசுகிர்தா, பெருவிளை பகுதியை சேர்ந்த தாமஸ், செல்லச்சாமி, ஆசீர்வாதம், பா, ராஜமணி, சுகர்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்