மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு நீர்மட்டமும் ஒரேநாளில் 3 அடி உயர்ந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் நீர்மட்டமும் ஒரேநாளில் 3 அடி உயர்ந்துள்ளது.

Update: 2018-07-11 23:15 GMT

மேட்டூர்,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கைகொடுக்காத நிலையில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் எதிரொலியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் உள்பட முக்கிய அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.

இதன் காரணமாக இந்த அணைகளுக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த சில நாட்களாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த தண்ணீர் திறப்பு நேற்று முன்தினம் வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து, மேட்டூர் அணையை வந்தடைகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 9–ந் தேதி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,533 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்தானது படிப்படியாக அதிகரித்து, நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 32 ஆயிரத்து 284 கனஅடியாக அதிகரித்து உள்ளது.

இதன் எதிரொலியாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் மளமளவென உயர்ந்து வருகிறது. கடந்த 9–ந் தேதி 63.72 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 65.15 அடியாக உயர்ந்தது. அது நேற்று மேலும் உயர்ந்து காலை 68.42 அடியாக உயர்ந்துள்ளது. அதாவது அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 3 அடி உயர்ந்துள்ளது.

இந்த நீர்வரத்தானது மேலும் அதிகரிக்குமானால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர வாய்ப்புள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மத்திய நீர்வள கமி‌ஷன், தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் வெள்ளத்தால் அபாயம் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்