கடலூரில் வீடு, குடோனில் நகை-பணம் கொள்ளை

கடலூரில் வீடு, குடோனில் நகை- பணத்தை கொள்ளையடித்ததோடு, செருப்புகளையும் அள்ளிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-07-11 21:45 GMT
கடலூர்,

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடலூர் புதுப்பாளையம் ராமதாஸ் நாயுடு தெருவை சேர்ந்தவர் திருவேங்கடம். இவருடைய மனைவி வத்சலா (வயது 70). இவர் தனது வீட்டு மாடியில் வசித்துக்கொண்டு, கீழ் பகுதியை ஆல்பேட்டை மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த சதாக்குல்லா மகன் சுலைமான் (32) என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். சுலைமான் அதில் செருப்பு குடோன் வைத்திருந்தார்.

இந்நிலையில் வீட்டில் தனியாக வசித்து வரும் வத்சலா கடந்த 8-ந்தேதி கோயம்புத்தூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட அவர் நேற்று அதிகாலை 4 மணி அளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது செருப்பு குடோன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, உள்பக்கம் மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இதை கண்ட அவர் குடோனில் சுலைமான் தான்இருக்கிறார் என நினைத்துக்கொண்டு வீட்டு மாடிக்கு சென்றாராம்.

அப்போது வீட்டு முன்பு செருப்பு வைக்கப்படும் அட்டை பெட்டிகள் சிதறி கிடந்தன. இதனால் சந்தேகமடைந்த அவர் தனது வீட்டு கதவை திறப்பதற்காக சென்றார். அங்கு அவரது வீட்டுக்கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த வத்சலா வீட்டுக்குள் சென்று பீரோவை பார்த்த போது, அதுவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிமணிகள் சிதறி கிடந்தன. இதையடுத்து பீரோவுக்குள் தான் வைத்திருந்த 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை பார்த்தபோது, அதை காணவில்லை. இதை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது.

இதைத்தொடர்ந்து அவர் செருப்பு குடோனுக்கு சென்று பார்த்தார். ஆனால் அங்கு யாரும் இல்லை. பின்னர் இது பற்றி சுலைமானுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சுலைமான் குடோனுக்கு வந்து பார்த்த போது, அவர் அங்கு வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை காணவில்லை. இதையும் அந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள புதிய செருப்புகளையும் அவர்கள் அள்ளிச்சென்று விட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீடு, குடோன் ஆகியவற்றில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மாடி வழியாக வந்த மர்ம நபர்கள் வத்சலா வீட்டில் கொள்ளையடித்து விட்டு படி வழியாக இறங்கி, குடோன் பூட்டையும் உடைத்து அதில் இருந்த பணம், செருப்புகளையும் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. செருப்பு அட்டை பெட்டிகளை வத்சலா வீட்டு முன்பு வீசி சென்றதும் தெரிந்தது.

இது பற்றி வத்சலா, சுலைமான் ஆகிய 2 பேரும் கடலூர் புதுநகர் போலீசில் தனித்தனியே புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு, செருப்பு குடோனில் நகை- பணம் மற்றும் செருப்புகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்