சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் நேற்று மாலை மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினார்கள்.

Update: 2018-07-11 22:00 GMT
சென்னை,

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து சென்னையில் பெரிய அளவில் மழை இல்லை.

இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் கடந்த 8-ந்தேதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இனிவரும் நாட்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தது.

அதன்படி, கடந்த 9-ந்தேதியில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் நேற்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக நல்ல மழை பெய்தது.

சென்னை எழும்பூர், புரசைவாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, மெரினா கடற்கரை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சாந்தோம் நெடுஞ்சாலை, புதுப்பேட்டை, அண்ணாசாலை, ராயப்பேட்டை, சென்டிரல் ரெயில் நிலையம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தியாகராயநகர், சைதாப்பேட்டை, கிண்டி, பழவந்தாங்கல் ஆகிய பகுதிகளில் நேற்று மாலையில் மழை பெய்தது.

அதேபோல், கொடுங்கையூர், மாதவரம், பெரம்பூர், செம்பியம், காசிமேடு, திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், முகப்பேர், அண்ணாநகர், அம்பத்தூர், வடபழனி, போரூர், திருவேற்காடு, பொன்னேரி, செங்குன்றம், மீஞ்சூர், பழவேற்காடு உள்பட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பல இடங்களில் பரவலாக மழை பொழிந்தது.


இதில் சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. மழை காரணமாக ஆங்காங்கே மழை நீரும் தேங்கியது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. குறிப்பாக ஜி.எஸ்.டி. சாலை, தண்டையார்ப்பேட்டை, கோயம்பேடு சாலை உள்பட பல பகுதிகளில் வாகனங்கள் ஆமை வேகத்தில் சென்றன.

வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் நனைந்தபடி சென்றதை பார்க்க முடிந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினார்கள்.

செங்குன்றம் அடுத்த சோத்துப்பாக்கம் பகுதியில் மின்சாரவயர் அறுத்து விழுந்தது. உடனடியாக மின்சார வாரிய ஊழியர்கள் அறுந்து விழுந்த மின்வயர்களை சரி செய்தனர்.

ஆலந்தூர், பரங்கிமலை, மீனம்பாக்கம், ஆதம்பாக்கம், பெருங்குடி, துரைப்பாக்கம், கீழ்கட்டளை, மடிப்பாக்கம் பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் 1 மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது.

மழை பெய்ய தொடங்கியதும் சிறிது நேரத்தில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தெருவிளக்குகளும் நிறுத்தப்பட்டதால் மாநகரத்தின் பல பகுதிகள் இருளில் மூழ்கின. மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மின்சார வாரிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு புகார்கள் அளித்தனர்.

இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் எதிர்பாராத வகையில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், மின்சாரத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. இந்த நடவடிக்கை வழக்கமான நடைமுறை தான். மழை நின்ற பிறகு மின்சார வயர்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள், இணைப்பு பெட்டிகளில் மரங்கள் விழுந்து எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதா? என்று ஆய்வு செய்யப்பட்டது.

ஒரு சில இடங்களில் மரங்கள் விழுந்து மின்சார இணைப்புகள் பாதிப்படைந்தன. பாதிப்படையாத பகுதிகளில் விரைவாகவும், பாதிப்படைந்த பகுதிகளில் மின்சார இணைப்புகள் சரி செய்த பின்னரும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்