எம்.கே.பி.நகர்-மணலி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை எம்.கே.பி.நகர் மற்றும் மணலி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டன.

Update: 2018-07-11 22:40 GMT
பெரம்பூர்,

சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகள், சாலையை ஆக்கிரமித்து கடைகள் முன்பு அமைக்கப்பட்டு உள்ள மேற்கூரைகள், அலங்கார வளைவுகளை அகற்றும்படி மண்டல அதிகாரி அனிதா உத்தரவிட்டார்.

அதன்படி தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட கொடுங்கையூர் 34-வது வார்டு மணலி நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்து இருந்த 30 கடைகளை நேற்று முன்தினம் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக இடித்து அகற்றினார்கள்.


இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக தண்டையார்பேட்டை மண்டலம் 36 மற்றும் 37 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட எம்.கே.பி.நகர், கண்ணதாசன் நகர், விவேகானந்தா நகரில் மீனாம்பாள் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

அதன்படி மீனாம்பாள் சாலையின் இருபுறமும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் உள்ள 150-க்கும் மேற்பட்ட கடைகளின் முன்பு சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த மேற்கூரைகள் மற்றும் கடையின் முன்பு இருந்த மேடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்து அகற்றினர். பெட்டிக்கடைகளும் அகற்றப்பட்டன.

இதேபோல் மணலி பஸ் நிலையம் அருகே நெடுஞ்செழியன் சாலையில் மாநகர பஸ் மற்றும் ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்த சாலையோரம் தனியார் சிலர் ஆக்கிரமித்து கடைகளை கட்டி உள்ளனர். இதனால் வாகனங்கள் சீராக செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்து வந்த புகாரின் பேரில் மணலி மண்டல செயற்பொறியாளர் ஸ்ரீகுமார், உதவி பொறியாளர்கள் வெங்கடேசன் குமார், உஷா மற்றும் ஊழியர்கள் போலீசாருடன் நெடுஞ்செழியன் சாலைக்கு வந்தனர். அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள்.

மேலும் செய்திகள்