நீட் தேர்வில் தவறான கேள்விக்கு மதிப்பெண்: ஐகோர்ட்டு தீர்ப்பினால் மாற்று நடவடிக்கை தொடர்பாக ஆராய்வோம் நாராயணசாமி உறுதி

நீட் தேர்வில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க மதுரை ஐகோர்ட்டு கிளை வழங்கிய தீர்ப்பினை தொடர்ந்து மாற்று நடவடிக்கை குறித்து ஆராயப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்தார்.

Update: 2018-07-11 22:30 GMT
புதுச்சேரி,


புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ. எழுப்பிய பிரச்சினையும், அதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி அளித்த பதிலும் வருமாறு:-

அன்பழகன்: தமிழ்வழியில் படித்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்கவேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுவையில் நீட் தேர்வு எழுதிய சுமார் 4 ஆயிரத்து 500 மாணவர்களில் சுமார் 1,700 பேர் நீட் தேர்வில் வெற்றிபெற்றதாக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. நம் மாநிலத்தில் தமிழ் வழியில் தேர்வு எழுதிய நூற்றுக்கணக்கான மாணவர்கள் தவறான அர்த்தத்தில் கேட்கப்பட்ட கேள்விகளால் வெற்றி பெரும் வாய்ப்பினை தவறிவிட்டனர். இதன் உண்மை நிலையை உயர்ந்து கோர்ட்டு தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண் அளித்து புதிய தரவரிசை பட்டியலை தயாரிக்க சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் முதல் கவுன்சில் முடிந்த நிலையில் இப்பிரச்சினையில் நாம் என்ன செய்யப்போகிறோம். தீர்ப்புக்கு முன் சென்டாக் மூலம் வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலை ரத்துசெய்து தீர்ப்பின்படி புதிய தரவரிசை பட்டியலை தயாரித்து அதன் அடிப்படையில் சென்டாக் மூலம் புதிய கலந்தாய்வு நடத்துவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆண்டுதோறும் சென்டாக்கில் நடைபெறும் குளறுபடியை தவிர்த்து நீதிமன்ற உத்தரவுப்படி மாணவர்கள் சேர்க்கையை சரியாக நடத்த வேண்டும். இதற்காக சி.பி.எஸ்.இ.டம் அரசு சார்பில் உடனடி கடிதம் எழுதி புதிய தேர்வு மற்றும் தரவரிசை பட்டியலை பெற வேண்டும். அதன்பிறகு 2-ம்கட்ட கலந்தாய்வு நடத்த வேண்டும்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி: தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண் வழங்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்டாக், இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகளிடம் பேசி மாற்று நடவடிக்கை குறித்து ஆராய்வோம். 

மேலும் செய்திகள்