அலங்கார மீன் வளர்ப்பு

நகர்ப்புற வீடுகளில் தொட்டிகளில் அலங்கார மீன்களை வளர்ப்பது பொழுது போக்காக இருக்கிறது.

Update: 2018-07-12 07:13 GMT
நகர்ப்புற வீடுகளில் தொட்டிகளில் அலங்கார மீன்களை வளர்ப்பது பொழுது போக்காக இருக்கிறது. மன அழுத்தம், இதயம் தொடர்பான பாதிப்புகள் இருப்பவர்கள் அன்றாடம் சிறிது நேரம் தொட்டிகளில் நீந்தும் மீன்களை கவனித்துக் கொண்டிருந்தால் மனம் அமைதி அடைவதுடன், இதய பாதிப்பும் குறைவதாக கூறப்படுகிறது. வீடுகளில் மீன் வளர்க்கும்போது சரியான தொழில்நுட்பங்கள் தெரியாததால் சிறிது நாளில் மீன் வளர்ப்பதை விட்டு விடுகின்றனர். அலங்கார மீன்களை வளர்க்கும் தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்வதன் மூலம் மீன் வளர்ப்பை எளிதாக செய்ய முடியும்.

மீன் தொட்டி

மீன் வளர்ப்பு செய்ய வாங்கும் தொட்டி நீர்க்கசிவு இன்றி இருக்க வேண்டும். எத்தனை மீன்களை வளர்க்கப்போகிறோமோ அதற்கு தக்க நீள, அகலத்தில் தொட்டி வாங்குவது நல்லது. பொதுவாக, மீன் வளர்ப்பு தொட்டியின் ஆழமும், அகலமும் ஒன்றாயிருத்தல் அவசியம்.

தேவைக்கு அதிகமான பெரிய தொட்டிகளை தவிர்க்க வேண்டும். அதிகமான ஆழமுள்ள தொட்டிகளில் நீரின் அழுத்தம் அதிகமாக இருப்பதால் உடைந்து விடும் அபாயம் உண்டு. மீன் தொட்டியை சமதளமான இடத்தில் வைக்க வேண்டும்.

மண் இடுதல், நீர் நிரப்புதல்

மீன்தொட்டிக்குள் பரவலாக மண் இடுவதில்லை. ஆனால், மீன்கள் நன்கு வளர சுத்தம் செய்யப்பட்ட தோட்ட மண்ணை இடலாம் என்றும் ஆற்று மண்ணை இடலாம் என்ற கருத்து நிலவுகிறது. பொதுவாக, நீர்வாழ் தாவரங்களை தொட்டிகளில் வளர்க்க விரும்புவோர் சிறிய மண் சாடிகளில் ஆற்று மணல் நிரப்பி மீன் தொட்டிக்குள் வைக்கலாம்.

மீன் வளர்ப்பு தொட்டியை அழகுபடுத்த சிறிய கூழாங்கற்களை தொட்டிகளில் பரப்பி விடலாம். மேலும், இறந்து போன மெல்லுடலிகளின் ஓடுகள், சங்குகள், சிப்பிகள் போன்றவற்றை பரப்பி விடலாம்.

மீன் வளர்க்கும் தொட்டிக்குள் நீர் நிரப்ப வாயகன்ற ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ள வேண்டும். இதனை தொட்டியின் மணலின் மேல் வைத்து விட்டு அந்த கிண்ணத்திலே தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றிக் கொண்டே வர வேண்டும். கிண்ணம் நிரம்பியவுடன் தண்ணீர் தொட்டிக்குள் நிரம்ப தொடங்கும். இதற்குப் பின்னர், தொட்டிக்குள் எந்த அளவு நீரை நிரப்ப விரும்புகிறோமோ அந்த அளவு நீரை நேரடியாக விடலாம். பொதுவாக ஆழ்துளை கிணறு தண்ணீரை மீன் வளர்க்க பயன்படுத்தலாம்.

நீர்த்தாவரங்கள்

நீரில் வாழும் மீன்கள் சுவாசிக்க தேவையான பிராணவாயுவை நீர் வாழ்தாவரங்கள் வெளியிடும். மேலும், மீன்கள் வெளிவிடும் கரியமில வாயுவை இந்த தாவரங்கள் கிரகித்துக்கொள்ளும். முட்டையிடும் மீன்கள் இந்த நீர்த்தாவரங்களில் முட்டையிடும்.

மீன் வளர்ப்புத் தொட்டிகளில் வேலம்பாசி, செரட்டோபில்லம், நாஜாஸ் உள்ளிட்ட நீர்வாழ்த்தாவரங்களை வளர்க்கலாம். மீன்களை இனப்பெருக்கம் செய்யும் பண்ணைகளில் இந்த நீர்வாழ்த்தாவரங்கள் கிடைக்கும்.

வளர்ப்பு முறை

மீன்களை விற்பனையாளரிடம் இருந்து வாங்கி வந்த உடனேயே ஏற்கனவே மீன்கள் வளர்ந்து கொண்டிருக்கும் தொட்டிகளில் விடக்கூடாது. புதிய மீன்களை ஒரு தனியான கண்ணாடி தொட்டியில் நல்ல தண்ணீரில் ஒரு சில நிமிடங்கள் இட்டு வைக்க வேண்டும். பின்னர் ஐந்து சதவீதம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலில் விட்டு உடனே எடுத்து விடவும்.

பிறகு இந்த கண்ணாடிக்குடுவையில் வைத்து இந்த மீன்களை ஒரு வாரம் வரை கவனித்து வர வேண்டும. அந்த மீன்களுக்கு எந்த வித நோய்களும் இல்லை என்று உறுதிப்படுத்திய பிறகே மற்ற மீன்கள் வளரும் தொட்டிகளில் விட வேண்டும்.

வியாபார வாய்ப்பு

இது போல், மீன் வளர்ப்பில் ஈடுபடும்போது இதனை சிறிய தொழிலாகவும் செய்யலாம். சிறிய குடுவை மற்றும் தொட்டிகளில் அழகான மீன்களை வளர்த்து விற்பனை செய்யும் போது பொருளாதாரத்தை ஈட்டலாம். 

மேலும் செய்திகள்