தாயை கொன்று குழிதோண்டி புதைத்த தொழிலாளி கைது

தாயை கொன்று குழிதோண்டி புதைத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். சந்தேகம் வராமல் இருக்க ஆட்டையும் கொன்று புதைத்தார்.

Update: 2018-07-12 23:15 GMT

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கப்பூர் வாளவராயன்குப்பத்தை சேர்ந்த முத்தையன் மனைவி உய்யம்மாள் (வயது 82). இவரது மகன் கலியமூர்த்தி (58), விவசாய கூலித்தொழிலாளி. உய்யம்மாள் தனது மகனுடன் வசித்துவந்தார். அரசு முதியோர் உதவித்தொகையும் பெற்றுவந்தார்.

கடந்த 2 மாதங்களாக உய்யம்மாள் முதியோர் உதவித்தொகையை வாங்கவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து கிராம தலைவர் கலியமூர்த்தியிடம் கேட்டதற்கு அவர் சரிவர பதில் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் கலியமூர்த்தி தனது தாயை கொலை செய்து புதைத்துவிட்டதாக கூறி சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:–

உய்யம்மாள் உடல்நிலை சரியில்லாததால் படுக்கையிலேயே இருந்தார். இதனால் கலியமூர்த்தியால் தனது தாயை பராமரிக்க இயலவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் 17–ந் தேதி தாய்–மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கலியமூர்த்தி ஆத்திரத்தில் தாயை கீழே தள்ளியதாகவும், அதில் தலையில் காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக அக்கம், பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க வீட்டில் இருந்த ஒரு ஆட்டை கலியமூர்த்தி வெட்டி கொன்றார். அந்த ஆடு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாக கூறி அதனை புதைக்க தனது வீட்டின் கொல்லைபுறத்தில் குழிதோண்டினார்.

அந்த குழிக்குள் தனது தாயின் உடலையும், ஆட்டையும் ஒன்றாக சேர்த்து கலியமூர்த்தி புதைத்தார். அவரது மனைவி பூசம் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார். இந்த விவரங்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கலியமூர்த்தியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்