சென்னையில், உள்ளாட்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உள்ளாட்சித்துறை பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Update: 2018-07-12 20:30 GMT
சென்னை,

ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு உள்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் விஜயபாஸ்கர், வாசுதேவன், தலைமை ஆலோசகர் எம்.சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க செயலாளர் என்.ஜெயசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான உள்ளாட்சித்துறை பணியாளர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது எஸ்.ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது.

பதவி உயர்வு உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ந் தேதி முதல் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்களும் நடத்தியுள்ளோம். இந்தநிலையில் அரசு எங்களுடன் 3 கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தையில் பல கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளது.

அதனை ஏற்று நடந்து வரும் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்திருக்கிறோம் ஆனால் அரசிடம் இருந்து உரிய ஆணை வெளியாகும்வரை தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம். வேலைநிறுத்த போராட்டம் காரணமாக மக்கள் நல பணிகள் கடுமையாக பாதித்தது. எனவே அப்பாதிப்பு மீண்டும் தொடராத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்