மாநிலத்தில் புற்று நோயால் ஆண்டுக்கு 1,000 பேர் பலி சட்டசபையில் தகவல்

புதுச்சேரி மாநிலத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு ஆண்டுக்கு 1000 பேர் பலியாகிறார்கள் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2018-07-12 23:00 GMT
புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் எழுப்பிய பிரச்சினையை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-


வையாபுரி மணிகண்டன்: புதுச்சேரி மாநிலத்தில் கேன்சர் நோயினால் (புற்றுநோய்) பொதுமக்கள் இறப்பு விகிதம் அதிகரிப்பதை அரசு அறியுமா?

முதல்-அமைச்சர் நாராயணசாமி: புற்றுநோய் சிகிச்சைக்காக இலவச பரிசோதனை சிகிச்சை மற்றும் மருந்துகள் அரசு மருத்துவமனை வாயிலாக வழங்கப்படுகிறது. மேம்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் பயிற்சி பெற்ற மனிதவள மேம்பாடு ஆகியவற்றை கொண்ட ஜிப்மரின் பிராந்திய புற்றுநோய் மையத்தின் ஆதரவுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிராந்திய அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக பராமரிப்பு வார்டுகள் தொடங்கப்பட்டு மருந்துவ நிபுணர்களின் முழு செயல்பாட்டில் உள்ளது.

வையாபுரி மணிகண்டன்: ஜிப்மருக்கு வெளிமாநிலத்தில் இருந்து நிறைய பேர் வருகின்றனர். நாம் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற தனியார் ஆஸ்பத்திரிக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கிறோம். அதைவிடுத்து முத்தியால்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10 ஆயிரம் சதுர அடி நிலம் உள்ளது. அங்கு புற்றுநோய் சிகிச்சை பிரிவினை தொடங்கலாம்.


அன்பழகன்: புற்றுநோயால்தான் பெரும்பாலானவர்கள் இறக்கின்றனர். இதற்கு காரணம் செல்போன் டவர்கள் தான். நகரப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட செல்போன் டவர்கள் உள்ளன. அதன் அலைக்கற்றை அளவை அளவிடும் வசதிகூட நம்மிடம் இல்லை.

டி.பி.ஆர்.செல்வம்: புற்றுநோய் அதிக அளவில் பெண்களுக்கு ஏற்படுகிறது. அதை ஆரம்பத்திலேயே கண்டறிய நம்மிடம் வசதி இல்லை.

ஜெயமூர்த்தி: ஜிப்மருக்கு சிகிச்சைக்கு சென்றால்கூட காலதாமதம் ஆகிறது. எனவே புற்றுநோய்க்கு தனிப்பிரிவு தொடங்குங்கள்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி: புதுவை மாநிலத்தில் ஆண்டுக்கு 1000 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். ஜிப்மரில் புற்றுநோயை கண்டுபிடிக்கும் வசதி உள்ளது. நாம் தனிப்பிரிவு தொடங்க மத்திய அரசை கேட்டால் ஜிப்மரில் இருப்பதை கூறுகிறார்கள். இருந்தாலும் இதற்கான தனிப்பிரிவினை தொடங்க நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

மேலும் செய்திகள்