குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா வேண்டுகோள்

குற்றங்கள் நடைபெறாமல் தடுத்திட போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2018-07-12 22:30 GMT
வில்லியனூர்,

புதுச்சேரி சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா நேற்று காலை வில்லியனூரை அடுத்த மங்கலம் போலீஸ் நிலையத்துக்கு திடீரென சென்று ஆய்வு நடத்தினார். அப்போது போலீஸ் நிலையத்தின் ஆவணங்களை பார்வையிட்ட அவர் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்கும்படி போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்றும் ஆய்வு செய்தார்.

பின்னர் மங்கலம் கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது புதுச்சேரி மாநில உயர போலீஸ் அதிகாரிகளின் மொபைல் போன் நம்பர்களை அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும், திருட்டு மற்றும் குற்றங்களை தடுப்பதில் போலீசாருடன் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பின்னர் மங்கலம் போலீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையத்துக்கு புதிதாக கட்டிடம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், வில்லியனூர் போலீஸ் இஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்