போலி பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியரை மிரட்டிய போது சிக்கினார்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியரை மிரட்டிய போலி பெண் சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-12 23:00 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே அலங்காநத்தம் பிரிவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு செவிலியராக அனீஸ் பரீதா பேகம் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் அவர் பணியில் இருந்த போது, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீருடையில் பெண் ஒருவர் ஸ்கூட்டரில் அங்கு வந்தார்.

அவர் அனீஸ் பரீதா பேகத்திடம், இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மீது புகார்கள் அதிகளவில் வருகிறது என்று கூறி மிரட்டி உள்ளார். உடனே சுகாதார நிலையம் அருகே உள்ள குடியிருப்பில் தங்கி இருந்த டாக்டர் திலகவதிக்கு, செவிலியர் அனீஸ் பரீதா பேகம் தகவல் தெரிவித்தார்.

உடனே அங்கு வந்த டாக்டர் திலகவதி, போலீஸ் சீருடையில் இருந்த அந்த பெண்ணிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?, உங்களின் அடையாள அட்டையை காண்பியுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் அங்கு வந்த பெண், அடையாள அட்டை இல்லை என்று கூறியதுடன், முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த டாக்டர் திலகவதி, எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே எருமப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் அங்கு வந்தார். அவர் போலீஸ் சீருடையில் இருந்த அந்த பெண்ணிடம் விசாரித்தார். அந்த பெண் மோகனூர் நாவலடியான் கோவில் அருகே வசித்து வரும் விமலா என்ற விமலாதேவி(வயது 40) என்பதும், அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அந்த பெண் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்பதும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இல்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த போலி சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்த போலீசார், அவரின் ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக மேல் விசாரணைக்காக நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு விமலாவை போலீசார் அழைத்து சென்றனர். பெண் போலி சப்-இன்ஸ்பெக்டர் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்