ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேளாண் வணிக இணை இயக்குனர் ஆய்வு

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேளாண் வணிக இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2018-07-12 22:45 GMT
விருத்தாசலம்,

கடலூர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் விருத்தாசலத்தில் அமைந்துள்ளது. இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு விருத்தாசலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் அறுவடை செய்த தானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்வார்கள்.

இந்த நிலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை ஆய்வு செய்வதற்காக சென்னை வேளாண் வணிக இணை இயக்குனர் நிஜாமுதீன் நேற்று முன்தினம் வந்தார். அப்போது அவர் விற்பனைக்கூடத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது விவசாயிகள் தங்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய 3 நாட்களுக்கு மேல் ஆகிறது. எனவே உடனே பணம் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர் வங்கி அதிகாரிகளை அழைத்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து வங்கி அலுவலர்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பணியமர்த்தலாமா? வங்கி ஏ.டி.எம். மையம் அமைக்கலாமா? எனவும், விவசாயிகளுக்கு வங்கி சேவைகள் எளிதில் கிடைப்பதற்கு என்னன்னெ நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்தும் வங்கி அதிகாரிகளுடன் வேளாண் வணிக இயக்குனர் நிஜாமுதீன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக விருத்தாசலம் உழவர் சந்தையை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது வேளாண் விற்பனை துறையின் மாவட்ட துணை இயக்குனர் ஜெயகுமார், விற்பனைக்குழு செயலாளர் தேவேந்திரன், வேளாண்மை அலுவலர்கள் சுகன்யா, ஆறுமுகம், தெய்வநிதி, கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்