சங்கரன்கோவிலில் பேக்கரி கடை உரிமையாளர் மீது தாக்குதல் போலீஸ் ஏட்டு உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு

சங்கரன்கோவிலில் பேக்கரி கடை உரிமையாளரை தாக்கிய போலீஸ் ஏட்டு உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2018-07-13 21:00 GMT

சங்கரன்கோவில், 

சங்கரன்கோவிலில் பேக்கரி கடை உரிமையாளரை தாக்கிய போலீஸ் ஏட்டு உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பேக்கரி கடை உரிமையாளர்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் கோமதியாபுரம் 3–ம் தெருவை சேர்ந்தவர் முப்பிடாதி (வயது 43). இவர் சங்கரன்கோவில் பஸ்நிலையம் முன்பு பேக்கரி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு முப்பிடாதி கடையில் உள்ள வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். சண்முகா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டுவாக பணிபுரியும் மாரிமுத்து மற்றும் அவருடைய நண்பர் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த சுப்புராம் ஆகிய 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். மோட்டார் சைக்கிளை மாரிமுத்து ஓட்டி வந்தார்.

2 பேர் மீது வழக்குப்பதிவு

அப்போது அவர் மோட்டார் சைக்கிளை முப்பிடாதி மீது மோதுவது போல் வந்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த முப்பிடாதி, மாரிமுத்துவை கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து, சுப்புராம் ஆகிய 2 பேரும் சேர்ந்து முப்பிடாதியை அவதூறாக பேசி, அடித்து உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த முப்பிடாதி, சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், சங்கரன்கோவில் டவுன் போலீசார் மாரிமுத்து மற்றும் சுப்புராம் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்