புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி

மாநில இணை இயக்குனர் ஆய்வு செய்து புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2018-07-13 21:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் கல்வி மாவட்டம் மற்றும் வேப்பூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கடந்த 9-ந் தேதி முதல் பாடவாரியாக புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி வகுப்பினை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருள்மொழி தேவி தொடங்கி வைத்தார். அதன்படி மாவட்ட அளவில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு சிறுவாச்சூர் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்திலும், 6-ம் வகுப்பிற்கு ஒன்றிய அளவில் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு ஈடன் கார்டன் மேல்நிலைப் பள்ளியிலும், ஆலத்தூர் ஒன்றியத்திற்கு செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பூர் ஒன்றியத்திற்கு ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி யிலும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்று வருகின்றன.

பயிற்சி நடைபெறும் மையங்களை அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் மாநில இணை இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார். இந்த பயிற்சி வருகிற 21-ந்தேதி வரை புதிய பாடத்திட்டம் சார்ந்து அனைத்து ஆசிரியர்களுக்கும் அளிக்கப்படவுள்ளது. இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் அம்பிகாபதி, ரோஸ்நிர்மலா, உதவி திட்ட அலுவலர்கள் ராஜா, நல்லுசாமி, பெரம்பலூர் மற்றும் வேப்பூர் கல்வி மாவட்ட வட்டார கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்