‘வாட்ஸ்-அப்’பில் பரவிய தவறான தகவலால் இருதரப்பினர் மோதல்

கடலூர் அருகே ‘வாட்ஸ்-அப்’பில் தவறான தகவல் பரப்பியதால் இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இதில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 6 குடிசைகள் எரிந்து சாம்பலானது.

Update: 2018-07-13 23:55 GMT
கடலூர் முதுநகர்,


கடலூர் முதுநகர் அருகே உள்ள சேடப்பாளையம் குத்துமேட்டுத்தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் ஆனந்தஜோதியும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாவாடைசாமி மகன் விக்னேசும்(வயது 23) ஒருவரை பற்றி ஒருவர் ‘வாட்ஸ்-அப்’பில் தவறான தகவலை பரப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் உருவானது. இதில் விக்னேஷ் தரப்பினரும், ஆனந்தஜோதி தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

இந்த சம்பவத்தில் பாவாடைசாமியின் மற்றொரு மகன் கார்த்திக், தனசேகர் மனைவி சுமதி ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகுந்தன், விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாகி உள்ள முருகன் மகன் ஆனந்தஜோதி, கபில் என்கிற கருணாகரன், சுரேஷ், அருள் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு 1.45 மணி அளவில் ஒரு கும்பல், முருகனின் குடிசை வீட்டின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடியது. அடுத்த சில நொடிகளில் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அப்போது வீட்டில் தூங்கி கொண்டு இருந்த முருகனின் மனைவி மங்களம் திடுக்கிட்டு எழுந்து பார்த்தார். வீடு தீப்பற்றி எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்து வீடுகளில் வசித்து வருபவர்கள் எழுந்தனர். உடனே அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.

அந்த சமயத்தில் முருகனின் வீட்டில் இருந்து கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் தீயை அணைக்க வந்தவர்கள், அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இந்த தீ அருகில் உள்ள தனசேகர், செல்வம், வெங்கடேசன், மாரியம்மாள், ராஜவேலு ஆகியோரது குடிசைகளுக்கும் பரவியது. மேலும் 3 தென்னை மரங்களும் எரிந்தது.

இந்த தீ விபத்து குறித்த தகவலின் பேரில் கடலூர் சிப்காட் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் 6 குடிசைகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. குடிசைகளில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள், தானிய வகைகள், துணிகள், ரேஷன்கார்டு, ஆதார் கார்டு மற்றும் ஆவணங்கள் எரிந்து நாசமானது.

இது குறித்து முருகனின் மனைவி மங்களம் கொடுத்த புகாரின் பேரில் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், சுப்பிரமணியன் மகன் செந்தில்குமார்(33) ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 

மேலும் செய்திகள்