மறையூர் பகுதியில் சூறாவளி காற்று: சாலையில் முறிந்து விழுந்த மரங்கள்; போக்குவரத்து பாதிப்பு

மறையூர் பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் மூணாறு, காந்தலூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-07-14 22:30 GMT
மறையூர்,

மறையூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதலே காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. மதியம் 3 மணி அளவில் மறையூர் பகுதியில் சூறாவளி காற்று வீசியது. இதில் மறையூர் நாச்சிவயல் பகுதியில் இருந்த மரம் வேராடு சாய்ந்து அருகேயுள்ள இரண்டு வீடுகளுக்கு இடையே விழுந்தது.

இதேபோல் பள்ளநாடு பகுதியில் வீசிய பலத்த காற்றுக்கு வேல்முருகன் என்பவரின் வீட்டின் மேற்கூரை சேதமடைந்தது. இதில் அவரின் மகன்கள் சரவணன் (வயது 13), மனீஷ் (7) ஆகியோர் காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மறையூர் ஆனைக்கால்பட்டியில் வீசிய சூறாவளிக்காற்றால் யுவராஜ் என்பவரின் வீடு சேதமடைந்தது. இதில் அவருடைய மகள் அனு (5) காயமடைந்தாள். இதையடுத்து அனுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் மறையூர்-மூணாறு, மறையூர்-காந்தலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பொதுமக்கள் உதவியுடன் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பின்னரே போக்குவரத்து சீரானது.

மேலும் பல இடங்களில் மின்கம்பங்கள் விழுந்ததால், மறையூர் பகுதியில் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. பின்னர் மின்சாரத்துறையினர் அங்கு விரைந்து சென்று மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் பல இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே மின்சாரத்துறையினர் சீரான மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்