குண்டும், குழியுமான சாலைகளால் உயிரிழப்பு பொதுப்பணித்துறை அலுவலகம் சூறை

குண்டும், குழியுமான சாலைகளால் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளால் ஆத்திரம் அடைந்த நவநிர்மாண் சேனாவினர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை சூறையாடினார்கள்.

Update: 2018-07-16 22:45 GMT
மும்பை,

மராட்டியத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மும்பை, தானே உள்பட முக்கிய நகரங்களில் உள்ள சாலைகள் பல்லாங்குழிகளாக மாறிவிட்டன. மழையால் குண்டும், குழியுமாகி விட்ட சாலைகள் உயிர்பலி வாங்கி வருகின்றன. குறிப்பாக கல்யாணில் மழையால் சேதம் அடைந்த சாலைகள் 5 பேரின் உயிர்களை பலி வாங்கிவிட்டன. தொடர்ந்து, விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன.

மழையால் சேதம் அடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்காமல் பொதுப்பணித்துறை மற்றும் மாநில சாலை மேம்பாட்டு கழகம் அலட்சியம் காட்டி வருவதாக மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி குற்றம் சாட்டியது.

இந்தநிலையில், நேற்று நவிமும்பை துர்பேயில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு நவநிர்மாண் சேனா கட்சி தொண்டர்கள் திரண்டு வந்தனர். அப்போது சயான்- பன்வெல் நெடுஞ்சலை குண்டும் குழியுமாக இருப்பதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், சேதம் அடைந்த சாலையை உடனே சரிசெய்ய வேண்டும் என கூறி அலுவலகத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த இருக்கைகள், மேஜை, கணினிகள், கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதன்பின்னர் நவநிர்மாண் சேனாவினர் அங்கிருந்து சென்றுவிட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.

பொதுப்பணித்துறை அலுவலகத்தை நவநிர்மாண் சேனாவினர் சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்