அரியானாவில் பனிச்சரிவில் சிக்கிய வாகனத்தை மீட்ட போது தர்மபுரி ராணுவ வீரர் பலி

அரியானாவில் பனிச்சரிவில் சிக்கிய வாகனத்தை மீட்கும் பணியின் போது ரோப் அறுந்து விழுந்ததில் தர்மபுரி ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-07-17 23:15 GMT
கடத்தூர்,

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள காவேரிபுரத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகன் சிவன் (வயது 29). இவர் அரியானா மாநிலம் அம்பாலாகேனாட் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி பூவிழி. கடந்த 14-ந்தேதி அம்பாலாகேனாட் பகுதியில் சிவன் சென்ற ராணுவ வாகனம் பனி சரிவில் சிக்கிக்கொண்டது. இதையடுத்து அந்த வாகனத்தை மீட்க கிரேன் கொண்டு செல்லப்பட்டு மீட்பு பணி நடைபெற்றது.

அப்போது அருகில் நின்றிருந்த சிவன் மீது கிரேனில் உள்ள இரும்பு ரோப் அறுந்து விழுந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே மற்ற ராணுவ வீரர்கள் அவரை மீட்டு சண்டீகாரில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சிவனின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் பெங்களூரு சென்று அங்கிருந்து அரியானா மாநிலத்திற்கு சென்றுள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) ராணுவ வீரர் சிவனின் உடல் விமானம் மூலம் பெங்களூரு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து சொந்த ஊரான காவேரிபுரத்திற்கு கொண்டு வரப்படுகிறது. ராணுவ வீரர் சிவன் இறந்த தகவல் அறிந்ததும், அவருடைய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் காவேரிபுரத்தில் உள்ள அவருடைய வீட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. 

மேலும் செய்திகள்