விஷம் குடித்து பட்டதாரி பெண் தற்கொலை: கணவர்- மாமியார் உள்பட 3 பேர் கைது

விஷம் குடித்து பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவருடைய கணவர், மாமியார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-17 22:30 GMT
பவானி,

சித்தோடு அருகே உள்ள கே.ஆர்.பி. நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மனைவி தமிழ்செல்வி (வயது 50). இவர்களுடைய மகன் மகேஷ் (28). டிரைவர். இவருடைய அண்ணன் விஜயகுமார். இவருடைய மனைவி ஹேமா (25).

இதேபோல் சித்தோடு காந்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. கூலித்தொழிலாளி. இவருடைய மகள் கோகுலபிரியா (23). பி.பி.ஏ. படித்து உள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மகேசும், கோகுலபிரியாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது. மாரிமுத்துவின் வீட்டில் விஜயகுமார், ஹேமா, மகேஷ், கோகுலபிரியா ஆகியோர் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கோகுலபிரியாவிடம், வரதட்சணையாக பணம் மற்றும் நகை வாங்கி வரும்படி மாமியார் தமிழ்செல்வி, மகேஷ், அவருடைய அண்ணி ஹேமா ஆகியோர் கொடுமை படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கூலித்தொழிலாளியான சுப்பிரமணி முடிந்த அளவுக்கு பணம் மற்றும் நகைகள் கொடுத்ததாக தெரிகிறது. எனினும் கூடுதலாக நகை மற்றும் பணம் கேட்டு உள்ளனர்.

இதன்காரணமாக மகேசுக்கும், கோகுலபிரியாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்து உள்ளது. சம்பவத்தன்றும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் கோகுலபிரியா மனமுடைந்து விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் கோகுலபிரியா பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் தன்னுடைய மகள் கோகுலபிரியா சாவில் மர்மம் இருப்பதாக கூறி சித்தோடு போலீசில், சுப்பிரமணி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தினார்.

இதனிடையே கோகுலபிரியாவின் கணவர் மகேஷ், தமிழ்செல்வி, ஹேமா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியது, வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்