திருமாநிலையூர் வாய்க்கால் தூர்வாரும் பணி கண்காணிப்பு அதிகாரி பார்வையிட்டார்

கரூர் அருகே திருமா நிலையூர் வாய்க்கால் தூர்வாரும் பணியை கண் காணிப்பு அதிகாரி ஆசிஸ் வச்சானி நேரில் பார்வையிட்டார்.

Update: 2018-07-17 22:45 GMT
கரூர்,

கரூர் மாவட்டத்தில் ரூ.12½ லட்சத்தில் திருமாநிலையூர் வலதுபுறம் வாய்க்காலில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணி மற்றும் வெள்ளதடுப்பு அமைக்கும் பணி உள்ளிட்டவை நடக்கின்றன. இதன் மூலம் அப்பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனவசதி பெற வாய்ப்புள்ளது. இந்த பணிகளை நேற்று கரூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலாளருமான ஆசிஸ் வச்சானி, மாவட்ட கலெக்டர் அன்பழகன் முன்னிலையில் நேரில் பார்வையிட்டார்.

அப்போது கண்காணிப்பு அதிகாரி கூறியதாவது:-

வாழ்வின் ஆதாரமாக அமையும் நீரினை பாதுகாக்கவும், சேகரிக்கவும் நீர்நிலைகள், வரத்துவாய்க்கால்கள், நீர் பிடிப்பு பகுதிகளை சீரமைக்க தமிழக அரசு குடிமராமத்து பணிகள் என்னும் திட்டத்தை தொடங்கி வைத்து செயல்படுத்துகிறது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் அனைத்து ஏரி, குளங்கள், நீர் பிடிப்பு பகுதிகள் பொதுமக்கள்- விவசாயிகள் பங்களிப்புடன் மாவட்ட நிர்வாகம் வாயிலாக தூர்வாரப்பட்டு வருகிறது. இப்பணிகள் கடந்த 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில், அமராவதி நீர்பிடிப்பு பகுதிகளுக்கு உட்பட்ட திருமாநிலையூர், மாயனூர், மணவாசி, பள்ளபாளையம், பஞ்சமாதேவி, சின்னதாராபுரம், நஞ்சக் காளக்குறிச்சி உள்ளிட்ட வாய்க்கால்களில் சுமார் 85 கிலோ மீட்டர் தொலைவிற்கு தூர்வாரும் பணிகளும், தடுப்புகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 60 சதவீதம் பணிகள் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கும், விவசாய சங்கங்களின் பிரதி நிதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது சிறப்பு தலைமை பொறியாளர் சேகர், செயற்பொறியாளர் தர்மலிங்கம், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் சரவணன், இளநிலை பொறியாளர்கள் ராஜகோபால், ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் ராமச்சந்திரன், வட்டாட்சியர் கலியமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்