1998-ம் ஆண்டுக்கு பின்னர் சொத்து வரியை ஏன் உயர்த்தவில்லை? மாநகராட்சிக்கு, ஐகோர்ட்டு கேள்வி

1998-ம் ஆண்டுக்கு பின்னர் சொத்து வரியை சென்னை மாநகராட்சி ஏன் உயர்த்தவில்லை? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2018-07-17 23:30 GMT
சென்னை, 

சென்னை நுங்கம்பாக்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கிறிஸ்தவ தேவாலயம் அமைத்து வழிபாடு நடத்தி வருவதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (சி.எம்.டி.ஏ.), சென்னை மாநகராட்சி ஆகியவற்றுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் நீதிபதிகள் முன்பாக ஆஜராகி, விதிமீறல் கட்டிடங்களை இடிக்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்கள்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

விதிமீறல் கட்டிடங்களை இடிக்க ஐகோர்ட்டு எவ்வளவு தான் உத்தரவுகளை பிறப்பித்தாலும், அதை அதிகாரிகள் அமல்படுத்துவதில்லை. இதனால் தேவையில்லாமல் கோர்ட்டு அவமதிப்பு வழக்குகள் அதிகளவில் தாக்கலாகின்றன. ஐகோர்ட்டின் நேரமும் விரயமாகிறது. எனவே எத்தனை உத்தரவுகள் இதுவரை அமல்படுத்தப்பட்டுள்ளது? என்பது குறித்து அதிகாரிகள் இருவரும் அடுத்த விசாரணையின்போது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஐகோர்ட்டு உத்தரவுகளை அமல்படுத்தும் வழிமுறைகளையும் அதிகாரிகள் உருவாக்க வேண்டும். சென்னை மாநகரில் 1069.40 கி.மீ. தூரத்திற்கு ரூ.4,034.30 கோடி செலவில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தையும், நகராட்சி நிர்வாக செயலாளரையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம்.

கழிவுகளை அப்புறப்படுத்த குடிநீர் வடிகால் வாரியம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சென்னை மாநகராட்சிக்கான சொத்துவரியை 1998-ம் ஆண்டுக்குப்பிறகு ஏன் உயர்த்தவில்லை. இந்த வரியை உயர்த்தக்கோரி நகராட்சி நிர்வாகத்துறை செயலாளருக்கு மாநகராட்சி ஆணையர் அறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையை பரிசீலித்து நகராட்சி நிர்வாக செயலாளர் 2 வாரத்தில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

அடுக்குமாடிகள் பெருகிவிட்ட சென்னை மாநகரில் அதற்கேற்ப கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகள் இல்லை. இதனால் நல்ல தண்ணீருடன் கழிவுநீர் கலந்து தொற்றுநோய் கிருமிகள் பரவுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிகள் அமைக்க தனியாக கட்டணம் வசூலிக்க மாநகராட்சி, சி.எம்.டி.ஏ. மற்றும் கழிவு நீரகற்று வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல விதிமீறி கட்டப்படும் கட்டிடங்கள் குறித்து தனியாக வலைதளம் ஏற்படுத்தி ஆன்லைன் மூலமாக தெரியப்படுத்தினால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்.

ஆனால் பெரும்பாலான கட்டிடங்களுக்கு முறையாக அனுமதி பெற்றுவிட்டு, அதன்பிறகு அத்துமீறி கட்டிடங்களை எழுப்புகின்றனர். அதிகாரிகளும் அதை கண்டுகொள்வதில்லை. அதன்பிறகு அதை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கின்றனர். விதிமீறல் கட்டிடங்களை ஆரம்பத்திலேயே தடுக்க அதிகாரிகளை கொண்டு தனிப்பிரிவுகளை ஏன் உருவாக்கக்கூடாது? என்பதற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்.

அதேபோல விதிமீறி கட்டப்படும் கட்டிடங்களுக்கு எவ்வாறு மின்இணைப்பு வழங்கப்படுகிறது? என்பது குறித்து தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும்.

நுங்கம்பாக்கத்தில் நடைபாதையை மறித்து சிலர் வழிபாடு நடத்துவதாக கூறப்பட்டது. வழிபாடு நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. அந்த வழிபாட்டை அவர்களது வீட்டிலும், வழிபாட்டு ஸ்தலத்திலும் நடத்த வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு செய்யும்விதமாக பொது இடத்தில் வழிபாடு நடத்துவதை ஏற்கமுடியாது. எனவே வழிபாடு நடத்த நடைபாதையை ஆக்கிரமித்தவர்களை போலீசாரின் துணையுடன் மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டும். இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்டு 3-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர். 

மேலும் செய்திகள்