பேராசிரியர் திட்டியதால் கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

பேராசிரியர் திட்டியதால் வேதனை அடைந்த கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைதொடர்ந்து வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-18 00:30 GMT
கோவை,

திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50). பனியன் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சிவகாமி (48). இவர்களுக்கு சஞ்சய் பிரசாந்த் (18) உள்பட 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சஞ்சய் பிரசாந்த் கோவை-அவினாசி ரோட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உற்பத்தியியல் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 10-ந் தேதி கல்லூரிக்கு வந்த அவர், வகுப்பறையில் அமர்ந்து சக நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த பேராசிரியர், திடீரென்று சஞ்சய் பிரசாந்தின் அடையாள அட்டையை பறித்ததுடன் பெற்றோரை அழைத்து வந்தால்தான் வகுப்பறைக்குள் சேர்ப்பதாகவும் கூறியதாக தெரிகிறது.

கல்லூரியில் நடந்த சம்பவம் எதையும் சஞ்சய் பிரசாந்த் தனது வீட்டில் கூறாமல் தொடர்ந்து கல்லூரிக்கு வந்துள்ளார். ஆனால் அவர் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் வேதனை அடைந்த அவர் வீட்டில் இருந்தபோது பெற்றோரிடமும் சரியாக பேசவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் சிவக்குமார் தனது வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார். அதன் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை தட்டியும் திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் கதவை உடைத்து பார்த்தபோது அங்கு சஞ்சய் பிரசாந்த் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சஞ்சய் பிரசாந்தை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சஞ்சய் பிரசாந்த் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட பெற்றோர் அலறிதுடித்தனர்.இது குறித்த புகாரின்பேரில் திருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அத்துடன் சஞ்சய் பிரசாந்தின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த கடிதத்தையும் கைப்பற்றியதுடன், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சஞ்சய் பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் அவர் படித்து வந்த அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு நேற்று முன்தினம் விடுமுறை விடப்பட்டது. நேற்று காலையில் கல்லூரி திறந்ததால் வழக்கம்போல மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு வந்தனர். வகுப்பறைக்குள் சென்ற அவர்கள் திடீரென்று காலை 9 மணிக்கு வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அந்த கல்லூரி முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது, பேராசிரியர் திட்டியதால்தான் சஞ்சய் பிரசாந்த் தற்கொலை செய்து உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார் கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி முதல்வர் வைரம் மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் அதில் எவ்வித தீர்வும் ஏற்பட வில்லை.

இந்த போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இதனால் போராட்டம் தீவிரமடைந்தது. இது குறித்து கல்லூரி முதல்வர் பீளமேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், மகேஷ்வரன் மற்றும் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் மாணவர் சாவுக்கு காரணமாக இருந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுத்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினார்கள். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாணவர்கள் சில கோரிக்கைகளை போலீசாருக்கும், கல்லூரி நிர்வாகத்துக்கும் முன்வைத்தனர். அந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசாரும், கல்லூரி முதல்வரும் உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையடுத்து கல்லூரியின் நுழைவு வாயில் இழுத்து மூடப்பட்டது. மாணவர்கள் உள்ளே புகுவதை தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் கோரிக்கை அடங்கிய மனுவும் கல்லூரி முதல்வரிடம் கொடுக்கப் பட்டது. இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறியதாவது.

மாணவர் சஞ்சய் பிரசாந்த் நன்றாக படிக்கக்கூடியவர். அனைத்து பருவத்தேர்வுகளிலும் வெற்றி பெற்று 90 சதவீத மதிப்பெண் பெற்று உள்ளார். யாரிடமும் தவறாக பேச மாட்டார். கடந்த 10-ந் தேதி அவர் சக நண்பர்களுடன் வகுப்பறையில் இருந்து வாடா, போடா என்று பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த எங்கள் வகுப்பு பொறுப்பு பேராசிரியர் முருகன், அவரை தான் திட்டுகிறார் என்று தவறாக நினைத்துக்கொண்டு, சஞ்சய் பிரசாந்தீன் அடையாள அட்டையை பிடுங்கிக்கொண்டதுடன், அவருடைய பெற்றோர் குறித்தும் தவறாக பேசி உள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

எனவே மாணவரின் சாவுக்கு காரணமாக இருந்த பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து தற்காலிகமாக எங்கள் போராட்டத்தை முடித்து உள்ளோம். உரிய முறையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்