மயிலாடும்பாறை அருகே சேதமடைந்த மலைப்பாதையில் ஆபத்தான பயணம்

மயிலாடும்பாறை அருகே சேதமடைந்த மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது.

Update: 2018-07-17 23:00 GMT
கடமலைக்குண்டு,

கடமலை-மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை அருகே தாழையூத்து கிராமத்தில் இருந்து மதுரை மாவட்டம் மல்லப்புரத்தை இணைக்கும் வகையில் மலைப்பாதை அமைந்துள்ளது. கடமலை- மயிலை ஒன்றியத்தில் இருந்து மதுரை மாவட்டம் செல்லும் பொதுமக்கள் அனைவரும் இந்த மலைப்பாதையை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர்.

இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாழையூத்து முதல் மல்லப்புரம் வரையில் 8 கி.மீ. தொலைவிற்கு புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. சில இடங்களில் சிமெண்டு சாலை, தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டது. சாலை அமைக்கப்பட்ட பின்பு தாழையூத்து கிராமத்தில் இருந்து மல்லப்புரம் வரை அரசு மினிபஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் சேவை பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக காணப்பட்டது. இந்த நிலையில் புதிதாக சாலை அமைக்கப்பட்ட பின்பு அதில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சில இடங் களில் மண் சரிவு ஏற்பட்டு சாலையின் அளவு குறுகியது. மேலும் ஏராளமான இடங்களில் சாலை சேதமடைந்து பள்ளங்களாக உள்ளது.

இதனால் அங்கு பஸ் சேவை நிறுத்தப்பட்டது. எனவே சாலையை சீரமைத்து பஸ் சேவையை மீண்டும் தொடர வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. பஸ் சேவை நிறுத்தப்பட்டாலும் தற்போது வரை ஆட்டோ, வேன், மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் பொதுமக்கள் மலைப்பாதை வழியாக பயணம் செய்து வருகின்றனர். காலை, மாலை நேரங்களில் இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை பராமரிப்பு இல்லாமல் மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இருப்பினும் தொலைவு குறைவு என்பதால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இந்த சாலையையே பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சாலை அதிக அளவில் சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் ஆபத்தான வகையில் பயணம் செய்யும் நிலை உள்ளது. மேலும் மழை பெய்யும் நேரங்களில் சாலையில் சில இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தாழையூத்து-மல்லப்புரம் இடையே புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்