உத்தமபாளையத்தில் குப்பைகளை அகற்றாததால் சுகாதாரக்கேடு

உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் குப்பைகள் அகற்றப்படாததால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

Update: 2018-07-17 23:15 GMT
உத்தமபாளையம்,

உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் இந்திராநகர், பி.டி.ஆர்.காலனி, மின்வாரிய நகர், தென்றல் நகர், பாதர்கான்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சி பகுதியில் நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. இங்கு நகராட்சிக்கு சமமாக மக்கள் தொகை இருக்கிறது. அதற்கு ஏற்ப துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் பேரூராட்சி பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது.

குறிப்பாக இங்குள்ள 10-வது வார்டு மற்றும் இந்திராநகர் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் நடந்து செல்லும் சாலையோரங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனை துப்புரவு பணியாளர் கள் அப்புறப்படுத்தாததால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் அந்த பகுதியில் நடந்து செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை தொடர்கிறது.

இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பலமுறை புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

பேரூராட்சி பகுதியில் தினந்தோறும் சேகரமாகும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் அகற்றுவதில்லை. இதனால் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் இந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்