நெல்லிக்குப்பம் அருகே தறிகெட்டு ஓடிய மணல் லாரி வயலில் பாய்ந்து விவசாயி பலி

நெல்லிக்குப்பம் அருகே தறிகெட்டு ஓடிய மணல் லாரி வயலில் பாய்ந்தது. இந்த விபத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த விவசாயி பலியானார்.

Update: 2018-07-18 21:49 GMT
நெல்லிக்குப்பம், 

இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நெல்லிக்குப்பம் அடுத்த வான்பாக்கம் தென்பெண்ணை ஆற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கிருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள்மணல் ஏற்றிக் கொண்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது.

அந்த வகையில் நேற்று வான்பாக்கத்தில் இருந்து மணல் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. அந்த லாரி, மேல்பட்டாம்பாக்கம் நோக்கி கஸ்டமஸ் சாலையில் வேகமாக சென்றது. நத்தமேடு என்ற இடத்தில் வந்தபோது, தறிகெட்டு ஓடிய லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த வயலுக்குள் பாய்ந்தது. இதில் வயலில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த நத்தமேட்டை சேர்ந்த ராஜவேல் (வயது 54) என்பவர் லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி, தலைமறைவானார்.

இது குறித்து தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், பலியான ராஜவேலின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்