அனைத்து வருவாய்த்துறை அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய்த்துறை அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-18 22:54 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் அரசு பொது சேவை மையத்திற்கு வந்த பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக துணிப்பைகளை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது.

மேலும், பிளாஸ்டிக் பைகள் கொண்டு வரும் பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூா மாவட்ட வருவாய்த்துறையின் சார்பில் இன்று (நேற்று) முதல் வருவாய்த்துறை அலுவலகங்களான கிராம நிர்வாக அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடை செய்துள்ளதோடு, துணிப்பைகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்றார்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார், பல்லடம் தாசில்தார் அருணா, தேர்தல் தாசில்தார் முருகதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தும் வகையில், திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பொதுமக்களுக்கும், அலுவலக ஊழியர்களுக்கும் துணிப்பைகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை அமலுக்கு வருவதற்குள் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிக்கப்பட வேண்டும். திருப்பூர் மாவட்டம் பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு முன்னோடி மாவட்டமாக திகழ வேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகங்களில் ஊழியர்கள் அனைவரும் பிளாஸ் டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

பிளாஸ்டிக்கை ஒழிப்பது குறித்தும், துணிப்பைகள் பயன்படுத்துவது குறித்தும் முதல்கட்டமாக பள்ளி மாணவ-மாணவிகளிடம் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மனு கொடுக்க வருகிறவர்களிடமும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்கவும் வலியுறுத்தப்படுகிறது. என்றார். இன்று (நேற்று) முதல் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது எனவும் அவர் உத்தரவிட்டார். இதுபோல் திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் நேற்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. வடக்கு தாசில்தார் ஜெயக்குமார், பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்கினார். அலுவலகத்துக்கு நேற்று பிளாஸ்டிக் பைகளை கொண்டு வந்த பொதுமக்களிடம் அந்த பைகளை வாங்கிக்கொண்டு துணிப்பைகளை வழங்கி அறிவுரை கூறினார்.

மேலும் அலுவலக வளாகத்தில் நெகிழி இல்லா அலுவலக வளாகம் என்ற விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்