தொண்டி பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை செயல் அலுவலர் தகவல்

தொண்டி பேரூராட்சியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செயல் அலுவலர் மாலதி தெரிவித்தார்.

Update: 2018-07-19 22:45 GMT
தொண்டி,

தொண்டி பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி நிருபர்களிடம் கூறியதாவது:- தொண்டி பேரூராட்சி பகுதியில் 20,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 3,000-த்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கும், 200-க்கும் மேற்பட்ட தெருக்குழாய்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுஉள்ளது.

இப்பேரூராட்சிக்கு காவிரி குடிநீர் திட்டம் மூலம் தினமும் சுமார் 11 லட்சம் லிட்டர் வரை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2 மாதங்களாக சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் காவிரி குடிநீர் திட்ட குழாய்களில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டதின் காரணமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தொண்டிக்கு தற்போது காவிரி குடிநீர் சுமார் 7 லட்சம் லிட்டர் அளவில் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல தொண்டி பேரூராட்சியின் தனி குடிநீர் திட்டமான சேந்தனி, ஆட்டூர், பாரூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தொண்டிக்கு தினமும் சுமார் 7 லட்சம் லிட்டர் வரை குடிநீர் வினியோகம் செய்யப்படும். தற்போது திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருவதையொட்டி தொண்டிக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் சேதமடைந்து உள்ளது.

இதனால் தொண்டிக்கு தனி குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் முற்றிலுமாக தடைபட்டுஉள்ளது. இதையடுத்து இங்கு சமீபகாலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே தற்காலிகமாக தொண்டி பேரூராட்சிக்கு கிடைக்கும் குடிநீரை பகுதிவாரியாக பிரித்து வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக குடிநீர் தடைபட்டதால் பொதுமக்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைக்காத நிலை இருந்து வருகிறது.


தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் தொண்டி பேரூராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இன்னும் இரண்டு வாரங்களில் குடிநீர் பற்றாக்குறை நீங்கிவிடும். எனவே பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து குடிநீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்