நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட 2 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை கோர்ட்டு தீர்ப்பு

தஞ்சையில், நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட 2 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

Update: 2018-07-19 22:15 GMT
கும்பகோணம்,

திருவாரூர் மாவட்டம் கூந்தலூரைச் சேர்ந்தவர் வாசுதேவன்(வயது 67). சேலம் மாவட்டம் நல்லமேய்ப்பன்பட்டி சுந்தரம் நகரைச் சேர்ந்தவர் முரளி(60). இவர்கள் இருவரும் இணைந்து தஞ்சாவூர் மானோஜியப்பா வீதியில் 1998-ம் ஆண்டு நிதி நிறுவனம்(சிட்பண்ட்) நடத்தி வந்தனர்.இந்த நிறுவனத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி வந்தனர். இந்த நிலையில் வாசுதேவன் மற்றும் முரளி ஆகிய இருவரும் சேர்ந்து ரூ.35 லட்சம் நிதியை மோசடி செய்து விட்டு நிதி நிறுவனத்தை திடீரென பூட்டி விட்டனர்.

இதுகுறித்து தஞ்சாவூர் முனிசிபல் காலனியை சேர்ந்த பசுபதி உள்ளிட்டோர் தஞ்சாவூர் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். இது தொடர்பான வழக்கு கும்பகோணத்தில் உள்ள கூடுதல் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்து தீர்ப்பு கூறப்பட்டது.நீதிபதி அய்யப்பன்பிள்ளை, நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக வாசுதேவனுக்கும், முரளிக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 

மேலும் செய்திகள்