தஞ்சை அருகே புறவழிச்சாலையில் விரிசல் மண் சரிவை தடுக்க மணல் மூட்டைகள் அடுக்கி வைப்பு

தஞ்சை அருகே புறவழிச்சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மண் சரிவை தடுக்க மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

Update: 2018-07-23 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் தஞ்சையை சுற்றி புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1995-ம் ஆண்டு தஞ்சையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற போது புறவழிச்சாலையின் முதல்பாதி பணிகள் முடிக்கப்பட்டு போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

இதையடுத்து 2-ம் கட்டமாக திருச்சி-வல்லம், தஞ்சை-திருவையாறு சாலையை இணைக்கும் வகையில் தஞ்சை புதிய கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்து பள்ளியக்கிரஹாரம் வரை 14 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.42 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டன. இந்த சாலையில் 2 பெரிய பாலங்கள், 3 சிறிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த 2-ம் கட்ட புறவழிச்சாலை மற்றும் ஆலக்குடி ரெயில்வே மேம்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு அக்டோபர் 27-ந் தேதி சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

இப்புதிய புறவழிசாலை பயன்பாட்டிற்கு வந்ததால் தஞ்சை நகரில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது. கும்பகோணம், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் இருந்து தஞ்சை வழியாக மாநிலத்தின் பிற இடங்களுக்கு செல்லும் கனரக வாகனங்களின் பயணதூரம் மற்றும் பயணநேரம் வெகுவாக குறையும் என்பதால் புறவழிச்சாலையை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

தஞ்சை-பூதலூர் சாலையும், புறவழிச்சாலையும் இணையும் இடத்தில் உள்ள ஒரு பாலத்தின் அருகே சாலையில் விரிசல் ஏற்பட்டு, மண் சரியும் நிலையில் உள்ளது. ஏதாவது கனரக வாகனங்கள் அந்த பகுதியில் சென்றால் கண்டிப்பாக மண் சரிந்துவிடும். இதனால் தற்காலிக நடவடிக்கையாக சாலையோரம் கட்டைகள், மணல் மூட்டைகளை கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புறவழிச்சாலை திறக்கப்பட்டு 9 மாதத்திற்குள் சாலையில் விரிசல் ஏற்பட்டு மண் சரிவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விரிசல் பெரிதாகிவிடக்கூடாது என்பதற்காக தற்காலிகமாக சிமெண்டு கலவையை நெடுஞ்சாலைத்துறையினர் ஊற்றி வைத்து இருக்கின்றனர். இந்த விரிசலை உடனே சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

மேலும் செய்திகள்