மோட்டார் சைக்கிள்–லாரி மோதல்; தந்தை, மகள் பலி

பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள்– லாரி மோதிய விபத்தில் தந்தை, மகள் பலியானார்கள்.

Update: 2018-07-24 23:15 GMT
சென்னை,

பொன்னேரியை அடுத்த திருஆயர்பாடியை சேர்ந்தவர் காசி முத்து மாடன்(வயது 58). பொன்னேரியை அடத்த உப்பளம் கிராமத்தில் பேக்கரி கடை வைத்து இருந்தார். இவரது மகள் ஆனந்தி (17). வேண்பாக்கத்தில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். நேற்று  காலை காசி முத்து மாடன் வழக்கம்போல் மகள் ஆனந்தியை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்றார். வழியில்  அரசு   கல்லூரி எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே காசி முத்து மாடன் பலியானார். படுகாயம் அடைந்த ஆனந்தி உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

விபத்து நடந்த கல்லூரி அருகே வேகத்தடை இல்லை. அதேபோல் மாணவி படிக்கும் பள்ளி அருகேயும் வேகத்தடை அமைக்கப்பட வில்லை. இதனால் அந்த பகுதிகளில் தொடர்ந்து விபத்து நடந்து வருகிறது.

மேலும் பொன்னேரியில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு நிலக்கரி ஏற்றிச்செல்லும் லாரிகளும் வேகமாக செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும் செய்திகள்