கடல் சீற்றத்தால் சேதமான கடற்கரை சாலை கண்டு கொள்ளாத அதிகாரிகளால் மீனவர்கள் கடும் அவதி

கொல்லங்கோடு பகுதியில் கடல் சீற்றத்தால் சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மீனவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

Update: 2018-07-26 22:45 GMT
கொல்லங்கோடு,

கொல்லங்கோடு அருகே இரையுமன்துறை முதல் நீரோடி காலனி வழியாக கேரளா மாநிலம் பொழியூருக்கு கடற்கரை சாலை செல்கிறது. இந்த சாலை சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த சாலை வழியாக இரையுமன்துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, நீரோடி காலனி போன்ற கடற்கரை கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கால்நடையாகவும், வாகனங்கள் மூலமாகவும் பயணம் செய்வது வழக்கம். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் இரவிபுத்தன்துறை எடப்பாடு பகுதியில் இருந்து வள்ளவிளை பகுதி வரை உள்ள சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சாலை சேதமடைந்து துண்டிக்கப்பட்டது.

இதனால் வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, நீரோடிகாலனி பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு தொழில் ரீதியாகவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். 5 கிலோ மீட்டர் தூரம் செல்வதற்கு தற்போது 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒகி புயலில் வள்ளவிளை, நீரோடி காலனி பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. ஆனால் போக்குவரத்துக்கு சாலை வசதி இல்லாததால் இந்த பகுதிக்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை என அந்த பகுதி மக்கள் புகார் கூறுகிறார்கள்.

எடப்பாடு, வள்ளவிளை ஆகிய கடற்கரை கிராமங்களை இணைக்கும் பிரதான சாலையும் துண்டிக்கப்பட்டு கிடப்பதால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் சாலையை சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என மீனவர்கள் புகார் கூறுகிறார்கள்.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்டு வரும் கடற்கரை கிராமங்களில் தூண்டில் வளைவு அமைத்தும், எடப்பாடு முதல் வள்ளவிளை வரை உள்ள சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்