ஈரோட்டில், வாடகை கார் ஓட்டுனர்கள் - தனியார் கால் டாக்சி நிறுவனத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

ஈரோட்டில், வாடகை கார் ஓட்டுனர்கள் தனியார் கால் டாக்சி நிறுவனத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-26 23:15 GMT
ஈரோடு,

ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் தனியார் கால் டாக்சி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை நேற்று மாலை 30-க்கும் மேற்பட்ட வாடகை கார் ஓட்டுனர்கள் முற்றுகையிட முயன்றனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் விரைந்து வந்து அவர்களை தடுத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வாடகை கார் ஓட்டுனர்கள் கூறும்போது, ‘இந்த கால் டாக்சி நிறுவனம் கட்டுப்படியாகும் வாடகையை விட குறைந்த வாடகைக்கு ஓட்டி வருகின்றனர். ஈரோடு மற்றும் கோவையில் இந்த நிறுவனத்திற்கு ஏராளமான வாகனங்கள் இயங்கி வருகிறது. அவர்கள் ஈரோட்டில் இருந்து பொதுமக்களை ஏற்றி கோவையில் இறக்கி விட்டால் ஒரு வாடகை மட்டும் வாங்கி கொள்கின்றனர்.

நாங்கள் ஈரோட்டில் இருந்து கோவைக்கு சென்றால் திரும்ப காலியாக தான் வரவேண்டும். அதற்காக நாங்கள் திரும்ப வரும் வாடகையையும் வாங்கி வருகின்றோம். இந்த நிறுவனத்தினால் எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. எங்களின் நிலையினை தெரியப்படுத்தவே இந்த நிறுவனத்தை முற்றுகையிட வந்தோம்’ என்றனர்.

அதைத்தொடர்ந்து போலீசார் கூறும்போது, ‘இதுகுறித்து முறையாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று, ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

மேலும் செய்திகள்