கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 66 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

Update: 2018-07-28 23:00 GMT
மண்டியா,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள (கிருஷ்ணராஜ சாகர்) கே.ஆர்.எஸ். அணையும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையில் அமைந்துள்ள கபினி அணையும் தங்களது முழுகொள்ளளவை எட்டி நிரம்பின. இதனால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன்காரணமாக காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் 2 அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணை நேற்று காலை நிலவரப்படி 122.70 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 34,740 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 40,780 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

அதேபோல கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 2,282.71 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 24,215 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 26,200 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

நேற்று காலை நிலவரப்படி இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு மொத்தம் வினாடிக்கு 66,980 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று முன்தினம் காலை இரு அணைகளில் இருந்தும் 74,980 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்