மராத்தா போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் திரும்ப பெறப்படும் : முதல்-மந்திரி தகவல்

மராத்தா சமுதாயத்தினர் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தியவர்களின் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Update: 2018-07-30 00:31 GMT
மும்பை,

மராத்தா சமுதாயத்தினர் இடஒதுக்கீடு கோரி மும்பையில் நடத்திய வேலை நிறுத்தத்தின் போது மராட்டியத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தை கட்டுப்படுத்த முயன்ற போலீசாரும் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் மராத்தா சமுதாயத்தினர் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தியவர்களின் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மும்பை சயாத்திரி விருந்தினர் மாளிகையில் நேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்த ராஜ்யசபா எம்.பி. நாராயண் ரானே, அவரது மகன் நிதேஷ் ரானே எம்.எல்.ஏ. மற்றும் மராத்தா சமுதாய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சமீபத்தில் நடந்த மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தின்போது பொருட்களை சேதப்படுத்திய இளைஞர்கள் மீது போலீசார் பதிவு செய்த வழக்குகள் திரும்பப்பெறப்படும். இருப்பினும் போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதான குற்றவியல் வழக்குகள் திரும்பப்பெறப்படாது. மற்ற வழக்குகள் திரும்பப்பெறப்படும்.

மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு கமிஷன் இந்த மாதத்திற்குள் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்துவிடும். அறிக்கை கிடைத்தவுடன் நாங்கள் சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்