சேதுபாவாசத்திரம் கடல் பகுதியில் குறைந்த எண்ணிக்கையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள்

சேதுபாவாசத்திரம் கடல் பகுதியில் குறைந்த எண்ணிக்கையில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறார்கள். போதிய மழை இன்றி வருவாய் குறைந்ததால் மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

Update: 2018-07-30 22:45 GMT
சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு, புதுபட்டிணம், மல்லிபட்டிணம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, சம்பைபட்டிணம், அடைக்கத்தேவன், மந்திரிபட்டிணம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மாதேவிபட்டிணம், குப்பத்தேவன், கணேசபுரம் உள்பட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.

இதில் மல்லிபட்டிணம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் மட்டும் சுமார் 301 விசைப்படகுகளும் மற்ற பகுதிகளில் 4 ஆயிரம் நாட்டுப்படகுகளும் உள்ளன. விசைப்படகுகள் திங்கள், புதன், சனி ஆகிய தினங்களிலும் மற்ற தினங்களில் நாட்டுப்படகுகளிலும் கடலுக்கு சென்று மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சேதுபாவாசத்திரம் கடலோர பகுதிகளில் கடந்த 3 வருடத்திற்கும் மேலாக போதுமான மழை இல்லை. அதே சமயம் மீன்பிடி தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு போதுமான வருமானம் இல்லாமல் மீனவர்கள் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளில் குறைந்த அளவு எண்ணிக்கையிலேயே கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடல் உள்ளே வாடைக்காற்று இல்லாமல், கடல் அலைகள் இல்லாமல் அமைதியாக காணப்படுவதால் போதிய அளவு மீன்கள் கிடைக்காததால் வருமானம் இன்றி செலவிற்கே பற்றாக்குறையாக வருவதால் மீனவர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விசைப்படகு மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜூதீன் கூறியதாவது:-

கடந்த 3 வருடங்களாக மழை இல்லாமல் மீன்பிடித்தொழில் மிகவும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. விவசாயத்தைப்போன்று மீன்பிடி தொழிலுக்கும் மழை மிக, மிக அவசியமாகும். அதேசமயம் தற்போது கடல் பகுதியில் வாடைக்காற்று வீசாமல் கடல் அலைகள் இன்றி தெளிவாக காணப்படுவதால் மீன் மற்றும் இறால் வருவாய் இன்றி மீன்பிடித்தொழில் அதிக அளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

டீசல் விலை உயர்வால் ஒரு தடவை கடலுக்குச்செல்ல சுமார் ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு ஆகிறது. ஆனால் வருமானம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரைதான் கிடைக்கிறது. தொழிலை விடாமல் செய்யவேண்டுமே என்ற நோக்கத்தில்தான் வருமானத்தை எதிர்பார்க்காமல் மீன்பிடி தொழில் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஒரே சமயத்தில் ஒட்டு மொத்த விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லாமல் மாறி, மாறி குறைந்த எண்ணிக்கையில் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். இதே போன்ற நிலையைத்தான் நாட்டுப்படகு மீனவர்களும் கையாண்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்