பயிற்சியின் போது பிளஸ்-1 மாணவன் சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

அரூரில் பயிற்சியின் போது பிளஸ்-1 மாணவன் இறந்ததால் அவனுடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-31 23:00 GMT
அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முத்துகுமார். இவரது மகன் ஜெயகுமார் (வயது 16). இவன் அரூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான். நேற்று முன்தினம் மாணவன் பள்ளியில் தடகள போட்டியில் பங்கேற்க பயிற்சியில் ஈடுபட்டபோது திடீரென மயங்கி விழுந்தான். ஆசிரியர்கள் மாணவனை மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாணவன் பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து அரூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் பள்ளி நிர்வாகம் மீதும், உடற்கல்வி ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அரூர் கச்சேரி மேட்டில் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன், தாசில்தார் பரமேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் சாலை மறியல் கைவிட்டனர். இதையடுத்து ஆஸ்பத்திரியில் இருந்து மாணவனின் உடலை உறவினர்கள் பெற்று சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்